ETV Bharat / state

வன்னியர் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் இது தான் நடந்தது - ரகசியத்தைப் போட்டு உடைத்த அன்புமணி! - Lok Sabha Elections 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 3, 2024, 5:25 PM IST

PMK Anbumani Ramadoss: 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக கூட்டணியிலிருந்தது. இப்போது அதிமுக வெளியேறி இருக்கிறது. நாங்கள் இருக்கிறோம். இதில் என்ன ஆச்சரியம். பாஜக கூட்டணியில் பாமக சென்றது என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு வயிற்றெரிச்சல் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

தருமபுரி: வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பது நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்தால் தேர்தல் களம் சற்றே சூடு பிடித்துள்ளது.

வாக்கு சேகரிக்கும் பணி: குறிப்பாக வேட்பாளர்கள் தீவிரமாக வாக்குகளைச் சேகரிப்பதற்கு வாக்காளர்களைச் சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் சௌமியா அன்புமணியை ஆதரித்து தருமபுரி வேல் பால் டிப்போ, டேக்கிஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

திமுகவும் கூட்டணியிலிருந்தது: அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினும் சரி, முன்னாள் முதலமைச்சரும் எடப்பாடி பழனிச்சாமியும் பாட்டாளி மக்கள் கட்சி திடீரென பாஜக கூட்டணியில் சென்றது போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 1998-இல் வாஜ்பாய் காலத்தில் அவரது தலைமையில் ஆறு ஆண்டுக் காலம் கூட்டணியிலிருந்தோம். அப்போது அதிமுகவும், திமுகவும் கூட்டணியிலிருந்தது.

கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம்: 2014-இல் பாஜக கூட்டணியில் நாங்கள் இருந்தோம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக கூட்டணியிலிருந்தோம். 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக கூட்டணி. இப்போது அதிமுக வெளியேறி இருக்கிறது. நாங்கள் இருக்கிறோம். இதில் என்ன ஆச்சரியம். பாஜக கூட்டணியில் பாமக சென்றது என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு வயிற்றெரிச்சல். நாங்கள் எங்கள் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

சமூக நீதிக்காக என்ன செய்தீர்கள்?: சமூக நீதிக்காக மருத்துவர் ராமதாஸ் 44 ஆண்டுகளாகப் போராடி வருகிறார். முன்னாள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, இன்னாள் முதலமைச்சராக உள்ள மு.க. ஸ்டாலின் நீங்கள் சமூக நீதிக்கு என்ன செய்தீர்கள்?. எடப்பாடி பழனிச்சாமியும், மு.க. ஸ்டாலினும் சமூக நீதிக்காக நீங்க இரண்டு பேரும் என்ன செய்தீர்கள். உங்கள் தலைவர்கள் அதாவது கருணாநிதி மற்றும் ஜெயலலிதா செய்ததை விட்டுவிடுங்கள்.

இட ஒதுக்கீடு வழங்கத் தைரியம் இல்லை: நான்காண்டு முதலமைச்சராக பணியாற்றிய எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்தார்?, மூன்றாண்டுக் கால முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் என்ன செய்திருக்கிறார். இருவரும் சமூக நீதிக்காக என்ன செய்தீர்கள் தனிப்பட்ட முறையில் என்ற கேள்வியை வைக்கிறேன். எடப்பாடி பழனிச்சாமி நான் பத்து புள்ளி ஐந்து சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தேன் என்று சொல்வார். உங்களை நாங்கள் தான் முதலமைச்சராகத் தொடர வைத்தோம்.

2019ஆம் ஆண்டு நாங்கள் இல்லை என்றால் நீங்கள் முதலமைச்சராகத் தொடர்ந்து இருக்க முடியாது. இரண்டு ஆண்டுக் காலம் எங்களால் தான் நீங்கள் முதலமைச்சராகத் தொடர்ந்தீர்கள். உங்களை நானும், மருத்துவர் ராமதாஸும் பலமுறை பார்த்தோம். வன்னியர் இட ஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி சந்தித்தோம். அப்பொழுது சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உங்களுக்குத் தைரியம் இல்லை. இட ஒதுக்கீடு வழங்குவதற்குத் தைரியம் இல்லை.

சமூக நீதி என்றால் என்னவென்று கூட தெரியாது: இரண்டு ஆண்டுக் கால கோரிக்கையை நீங்கள் நிறைவேற்றவில்லை. நான்கு மாதங்கள் பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் தரவில்லை. தேர்தல் ஆணையம் நான்கு மணிக்குத் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிக்கும் போது, 12 மணிக்கு எத்தனை தொகுதி என்று ஒதுக்கீடு கையெழுத்துப் போட்டால் ஒரு மணிக்குச் சட்டத்தைக் கொண்டு வருவோம். இதுதான் உங்கள் சமூக நீதியா. இதுதான் உங்கள் அக்கறையா.

உண்மையிலேயே அக்கறை இருந்தால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கொடுத்து இருப்பீர்கள். இந்த சமூகம் மீது உங்களுக்கு அக்கறை இல்லை. சமூக நீதி என்றால் என்னவென்று கூட தெரியாது. கடைசி நிமிடத்தில் இட ஒதுக்கீடு வழங்கியதால் தான் நீதிமன்றம் தடை செய்திருக்கிறார்கள்” என்றார். இந்த பேட்டியின் போது பென்னாகரம் எம்.எல்.ஏ ஜி.கே மணி, தர்மபுரி எம்.எல்.ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.பி மருத்துவர் செந்தில், வழக்கறிஞர் பாரிமோகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: "விவிபேட் பயன்படுத்தும் முறை மாற்றம்; 2% தவறான வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு" - ஆர்.எஸ்.பாரதி அளித்த விளக்கம் என்ன? - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.