ETV Bharat / state

"எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு தரமான சேலைகள் மக்களுக்கு வழங்கல்" - சட்டப்பேரவையில் அமைச்சர் காந்தி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 1:03 PM IST

எப்போதும் இல்லாத அளவிற்கு உரிய நேரத்தில் டிசம்பர் மாத இறுதியிலேயே தரமான சேலைகளை வழங்க இந்த ஆட்சியில் தான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனக் கைத்தறித் துறை அமைச்சர் காந்தி சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தெரிவித்தார்.

எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு தரமான சேலைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு தரமான சேலைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

சென்னை: நடப்பாண்டிற்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து மூன்றாவது நாள் அமர்வு இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய வினாக்கள் விடை நேரத்தில், தரமற்ற சேலைகளின் உற்பத்தியை கட்டுப்படுத்தியும், தரமான சேலைகளை உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக விசைத்தறி கூட்டுறவு சங்கத்தை அமைக்கக் கோரி சங்ககிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன் கோரிக்கை வைத்தார்.

மேலும் இது போன்று வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் சேலைகளால் விசைத்தறி தொழிலாளர்களும் அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றனர். அதனால் அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், சங்கம் அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவும் கோரிக்கை வைத்தார்.

அதே போல தமிழ்நாட்டில் அதிக அளவில் தரமற்ற சேலைகள் புழக்கத்தில் இருப்பதாகவும், அவற்றைக் கட்டுப்படுத்தி தரமான சேலைகளை உற்பத்தி செய்யும் விதமாக உத்தமங்கலத்தில் விசைத்தறி கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டுமெனவும் சுந்தரராஜன் கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதிலளித்து பேசிய தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, ஏற்கனவே தரமற்ற சேலைகள் புழக்கத்தில் இருந்து வருகிறது. மேலும் அவைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தரமற்ற சேலைகளை கட்டுப்படுத்துவதற்கான சங்கங்கள் அமைப்பதற்கான விதிகள் ஏதும் தற்போது வரை கிடையாது. மேலும் அதற்கான விதிகளை கடந்த அதிமுக ஆட்சியிலும் கொண்டு வரவில்லை என அமைச்சர் காந்தி குறிப்பிட்டார்.

மேலும் தற்போது கோரிக்கை வைத்துள்ளதன் அடிப்படையில் சங்கம் அமைப்பதற்கான விதிகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த ஆட்சியில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு உரிய நேரத்தில் டிசம்பர் மாத இறுதியில் தரமான சேலைகளை மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விமானத்தில் பயணித்த பெண் பயணி திடீர் மாரடைப்பால் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.