ETV Bharat / state

4 ஆண்டுகளுக்கு பிறகு சாதாரண ரயில்களின் கட்டணம் குறைப்பு.. பயணிகள் உற்சாகம்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 11:46 AM IST

Passenger Train ticket price down: கரோனா காலகட்டத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில் கட்டணம் 4 ஆண்டுகளுக்குப் பின் பழையபடி குறைக்கப்பட்டுள்ளது, ரயில் பயணிகள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Passenger Train ticket Price Reduced after 4 years
4 ஆண்டுகளுக்கு பிறகு பயணிகள் ரயில் டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளது

திருநெல்வேலி: கடந்த 2020ஆம் ஆண்டு ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய கரோனா பெருந்தொற்று காலகட்டத்தில், ரயில் சேவையானது கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும், பல மாதங்கள் ரயல் சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பின்னர், அச்சமயத்தில் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட, பயணிகள் ரயிலானது விரைவு ரயிலாக மாற்றப்பட்டு, குறைந்தபட்ச கட்டணமாக ரூ.30 நிர்ணயம் செய்யப்பட்டது.

அதற்கு முன்பு வரை பயணிகள் ரயிலில் குறைந்தபட்ச கட்டணம் வெறும் 10 ரூபாயாக இருந்த நிலையில், இந்த திடீர் கட்டண உயர்வு பயணிகளுக்கு பேரிடியாக இருந்தது. எனவே, கரோனா தாக்கம் குறைந்து இயல்பு நிலை திரும்பியதை அடுத்து, மீண்டும் பழையபடி விரைவு ரயிலை பயணிகள் ரயிலாக இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் தொடர்ந்து மத்திய அரசுக்குக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால், கரோனா பேரிடர் காலகட்டம் முடிந்து சுமார் 4 ஆண்டுகள் ஆகியும், பயணிகள் ரயில் கட்டணம் குறைக்கப்படாமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில், திடீரென எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நேற்று (பிப்.26) நள்ளிரவு 12 மணி முதல் விரைவு ரயிலாக மாற்றப்பட்ட பயணிகள் ரயில், மீண்டும் பயணிகள் ரயிலாக மாற்றப்பட்டு கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதுரை ரயில்வே கோட்டத்தில் இயக்கப்படும் பயணிகள் ரயிலில் கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது.

குறிப்பாக, திருநெல்வேலி முதல் செங்கோட்டை வரை இயங்கும் பயணிகள் ரயிலில், குறைந்தபட்ச கட்டணமாக 30 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், ரயில்வே துறையின் வாய்மொழி உத்தரவு அடிப்படையில், தற்போது குறைந்தபட்ச கட்டணமாக பத்து ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இதனால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்த சாதாரணக் கட்டணம் அதிவேக விரைவு ரயில்களுக்கு பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே, ரயில் கட்டணம் குறைக்கப்பட்டது ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், ரயில் கட்டணத்தைக் குறைக்கக் கோரி பயணிகள் தரப்பில் பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில், அப்போதெல்லாம் குறைக்கப்படாத கட்டணம், எவ்வித முன்னறிவிப்பு இன்றி திடீரென குறைக்கப்பட்டு இருக்கும் நடவடிக்கைக்குப் பின், அரசியல் ரீதியான காரணங்கள் அமைந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், விரைவு ரயிலாக மாற்றப்பட்ட பயணிகள் ரயில், மீண்டும் பயணிகள் ரயிலாக மாற்றப்பட்டு இருப்பது, தேர்தலை முன்னிட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: பஸ் விபத்தில் உயிரிழந்த அரசு ஊழியர்: ரூ.91 லட்சம் இழப்பீடு வழங்க தீர்ப்பாயம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.