ETV Bharat / state

பழனி கோயில் கிரிவலப் பாதையில் இலவச மினி பஸ், பேட்டரி கார்கள் இயக்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 10:19 PM IST

Mini buses at Palani Girivalam path: பழனி கோயில் கிரிவலப் பாதையில் தனியார் வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் மினி பஸ் மற்றும் பேட்டரி கார்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலவச மினி பஸ், பேட்டரி கார்கள் இயக்க கோயில் நிர்வாகம் ஏற்பாடு
பழனி கோயில் கிரிவலப் பாதையில் தனியார் வாகனங்களுக்கு தடை

திண்டுக்கல்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், பழனி கோயில் கிரிவலப் பாதையில் தனியார் வாகனங்களுக்கு மார்ச் 8ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்கள் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் இலவசமாக மினி பஸ் மற்றும் பேட்டரி கார்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்கள் வருகை காரணமாக மலையடிவாரத்தில் நெரிசல் ஏற்படுவதாகவும், கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும் ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மலை அடிவாரத்தில் கிரிவலப் பாதையில் வர்த்தக ரீதியாக உள்ள அனைத்து கடைகளையும் அகற்றக் கோரியும், கிரிவலப் பாதையில் வாகனங்களை அனுமதிக்கக் கூடாது எனவும் கூறி உத்தரவிட்டது. இதனை அடுத்து, பழனி கோயில் தேவஸ்தான நிர்வாகம் ஆக்கிரமிப்புக் கடைகளைக் கண்டறிந்து, அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தனியார் வாகனங்கள் கிரிவலப் பாதையில் நுழைவதை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் மார்ச் 8ஆம் தேதிக்கு மேல் அனைத்து தனியார் வாகனங்களும் கிரிவலப் பாதையில் அனுமதிக்கப்படாது எனவும், பழனி கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை சுற்றுலா வாகன நிறுத்தத்தில் நிறுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் கோயில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கிரிவலப் பாதையில் பக்தர்கள் செல்வதற்கு வசதியாக இலவசமாக பேட்டரி கார்கள் மற்றும் மினி பேருந்தை இயக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், பக்தர்கள் கோயில் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என கோயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தின் மலைப்பகுதியில் ஓடும் பேருந்துகள் விரைவில் புதிய பேருந்துகளாக மாற்றம் - அமைச்சர் சிவசங்கர் உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.