ETV Bharat / state

"10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் கடைசி இடத்தில் தமிழக வட மாவட்டங்கள்" - ராமதாஸ் வருத்தம்! - Ramadoss about 10th result

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 5:52 PM IST

PMK Ramadoss: 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி விகிதங்களில் கடைசி 15 இடங்களில் 12 இடங்கள் வட மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன என பாமக நிறுவனர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

PMK Ramadoss
மாணவர் தேர்வு எழுதும் கோப்பு புகைப்படம், பாமக நிறுவனர் ராமதாஸ் புகைப்படம் (credits - ETV Bharat Tamul Nadu)

சென்னை: தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வெளியான நிலையில், இந்த தேர்வு எழுதிய 8 லட்சத்து 94 ஆயிரத்து 264 பேரில் 8 லட்சத்து 18 ஆயிரத்து 743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் 91.55 சதவீதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.

இந்த நிலையில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கடைசி 15 இடங்களில் 12 இடங்கள் வட மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன என பாமக நிறுவனர் ராமதாஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 91.55% மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் பொதுத்தேர்வில் தோற்ற மாணவர்கள் அதை நினைத்துக் கவலையடையக் கூடாது. அடுத்த மாதமே துணைத் தேர்வுகள் நடத்தப்படவுள்ள நிலையில், அதில் பங்கேற்று தேர்ச்சியடைந்து மேல்நிலை வகுப்பில் சேர வாழ்த்துகிறேன்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் தான் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.58% தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், மாணவிகள் 94.53% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ள போதிலும் மேல்நிலைக் கல்விக்கு செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பது வருத்தமளிக்கிறது. பெண்களைக் குறைந்தபட்சம் பட்ட மேற்படிப்பு வரையிலாவது படிக்க வைக்கப் பெற்றோர்கள் முன்வர வேண்டும்.

தேர்ச்சி விகிதங்களில் அரியலூர் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்திருப்பதும், வடக்கு மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம் முதன்முறையாக 10ஆம் இடத்தை பிடித்திருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. எனினும், இதை விதிவிலக்காகவே பார்க்க வேண்டியுள்ளது. பெரும்பான்மையான வடக்கு மற்றும் காவிரி பாசன மாவட்டங்களின் 10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதங்கள் தொடர்ந்து கவலை அளிப்பவையாகவே உள்ளன.

தேர்ச்சி விகிதங்களைப் பொறுத்தவரை இந்த ஆண்டும் வடக்கு மாவட்டங்கள் தான் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன என்பது கவலையும், வருத்தமும் அளிக்கிறது. தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் தான் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது. வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், சென்னை, நாகப்பட்டினம் ஆகிய 10 மாவட்டங்களில் நாகப்பட்டினம் தவிர மீதமுள்ள 9 மாவட்டங்களும் வடக்கு மாவட்டங்கள்.

தேர்ச்சி விகிதங்களில் கடைசி 11 முதல் 15 வரையிலான இடங்களை பிடித்துள்ள தருமபுரி, மயிலாடுதுறை, நீலகிரி, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் 3 மாவட்டங்கள் வடதமிழகத்தைச் சேர்ந்தவை. மயிலாடுதுறை காவிரி பாசன மாவட்டம் ஆகும். தேர்ச்சி விகிதங்களில் முதல் 10 இடங்களுக்குள் வழக்கமாக வரக்கூடிய நீலகிரி மாவட்டம் இம்முறை கடைசியிலிருந்து 13ஆம் இடத்தை பிடித்திருப்பதும் கவலையளிக்கிறது, அந்த மாவட்டத்தின் வீழ்ச்சி குறித்தும் ஆராயப்பட வேண்டும்.

மேலும், கடந்த வாரம் வெளியிடப்பட்ட 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் கூட கடைசி 15 இடங்களில் 10 வட மாவட்டங்கள் தான் இடம் பெற்றிருந்தன. ஆனால், இம்முறை 12 மாவட்டங்கள் இந்தப் பட்டியலில் வருகின்றன. வட மாவட்டங்களின் கல்வி நிலை மேலும், மேலும் சீரழிந்து வருவதையே இந்த புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 35 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்த அவல நிலைக்கான காரணம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முதன்மைக் காரணம். வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு இரண்டாவது காரணம் அங்குள்ள மக்களின் சமூக, பொருளாதாரக் காரணிகள். இந்த இருகாரணங்களையும் மாற்ற வேண்டும். ஆனால், சமூகநீதிப் பார்வையும், தொலைநோக்குப் பார்வையும் இல்லாத அரசு அதை செய்யவில்லை.

இனியாவது வட மாவட்டங்கள் மீதான பாராமுகத்தையும், பாகுபாட்டையும் கைவிட்டு, வடமாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அப்பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்" இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு எப்போது? விடைத்தாள் நகல் பெறுவது எப்படி? - 10th Supplementary Exam Date

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.