ETV Bharat / state

கேன்சலான பாஜகவின் இணைப்பு விழா.. எல்.முருகன் கொடுத்த முக்கிய அப்டேட்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 26, 2024, 11:05 PM IST

BJP Meeting: தமிழகத்தின் முக்கியப் புள்ளிகள் பாஜகவில் இணையவிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், தனியார் நட்சத்திர ஹோட்டலில் இன்று (பிப்.26) நடைபெற்ற இணைப்பு விழாவில் எந்த மாற்றுக் கட்சியினருமே பாஜகவில் இணைய முன்வரவில்லை.

இணையமைச்சர் எல்.முருகன்
இணையமைச்சர் எல்.முருகன்

கேன்சலான பாஜகவின் இணைப்பு விழா.. எல்.முருகன் கொடுத்த முக்கிய அப்டேட்..!

கோயம்புத்தூர்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னதாக பிப்.26ஆம் தேதி தமிழகத்தின் முக்கியப் புள்ளிகள் பாஜகவில் இணையவுள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த முக்கியமான நபர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது முன்னாள் அமைச்சர்கள் பாஜகவில் இணையலாம் என எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் இன்று (பிப்.26) மாலை கோவை - அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இணைப்பு விழா நிகழ்ச்சி மற்றும் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என பாஜக மாநில தலைவர் இன்று மீண்டும் தெரிவித்தார்.

ஆனால் பாஜகவில் இணைய எந்த கட்சியினருமே முன்வரவில்லை. அதனால் அங்கிருந்த பாஜக நிர்வாகிகள், செய்தியாளர்கள் பல மணிநேரம் காத்திருந்தனர். மேலும் ஹோட்டலுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் வராத நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பாஜகவில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி பிரதமரின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களினால் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் எல்.முருகன் பேசியதாவது, "பிரதமர் நரேந்திர மோடி நாளை(பிப்.27) திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் வர உள்ளார். 'என் மண், என் மக்கள் யாத்திரை' 234 தொகுதிகளிலும் மக்களின் பேராதரவோடு நடந்தது. பிரதமர் மோடியின் 10 ஆண்டு சாதனையை எடுத்துச் செல்லும் வகையிலும், திமுக அரசின் தோல்விகளை எடுத்துச் செல்லும் யாத்திரையாக இருந்தது.

எந்த அரசியல் கட்சியும் நடத்திடாத வகையில் மிகப் பிரமாண்டமாக நாளை(பிப்.27) நிகழ்ச்சி நடைபெறும். பிரதமர் மோடியின் இரண்டு நாள் பயணம் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பாஜக ஆட்சியில் 11 லட்சம் கோடி ரூபாய்க்கானத் திட்டங்கள் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் மொழி, தமிழ்க் கலாச்சாரத்திற்குப் பெருமை சேர்க்கும் மோடிக்கு தமிழக மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்க உள்ளோம். பிரதமர் மோடியின் வருகை செய்தி மக்களிடம் சேர வேண்டும். மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா நிகழ்ச்சி தள்ளிப் போய் உள்ளது.

தமிழ்நாடு வேகமாக வளர காரணம் மோடியின் தனிப்பட்ட அக்கறையே காரணம். பாதுகாப்பு அம்சம் உள்ளிட்ட காரணங்களால் இணைப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சியிலிருந்தும் பாஜகவிற்கு வர உள்ளார்கள். மாற்றுக் கட்சியினர் மோடியின் ஆட்சியின் மீது நம்பிக்கை வைத்து அவர்களாக வருகிறார்கள்" என்று தெரிவித்தார்.

அப்போது இணைப்பு விழா ரத்து குறித்து செய்தியாளர்களின் தொடர் கேள்விக்கு, ஆத்திரமடைந்த இணையமைச்சர் எல்.முருகன், செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து, வெகு நேரமாக பாஜகவின் இணைப்பு விழாவில் பங்கேற்கக் காத்திருந்த நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் பெரும் ஏமாற்றத்துடனே திரும்பிச் சென்றார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ராஜா அம்மையப்பன், "நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியுள்ளேன். நாளை பிரதமரைச் சந்தித்து இலங்கை தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என வலியுறுத்த உள்ளேன். அவர்கள் பிரதமரைச் சந்திக்க வாய்ப்பு தருவதாகக் கூறியுள்ளார்கள். நான் பாஜகவில் இணையவில்லை. நான் கட்சியில் இணைய வரவில்லை. நாம் வேறு ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டேன்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, சிஏஏவில் இலங்கை தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படவில்லை என செய்தியாளர்களின் கேள்விக்கு, எந்தவித பதிலளிக்காமல் சென்றார். முன்னதாக இணைப்பு விழா நடைபெற்ற தனியார் நட்சத்திர ஹோட்டலில் முக்கிய கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாராவது இணைவார்களா என்று எதிர்பார்த்த நிலையில் ஹோட்டலுக்கு எதிரே உள்ள பங்களாவிற்குக் கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ஜுனன் வந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை வடக்கு தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், கோவை மாநகர் மாவட்டச் செயலாளருமான அம்மன் அர்ஜுனனிடம் இதுகுறித்து கேட்டபோது, நிகழ்ச்சி நடப்பது குறித்து ஏதும் எனக்குத் தெரியாது என்றும், நான் வழக்கமாக இங்குத் தேநீர் அருந்த வருவேன் எனத் தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிங்க: சென்னை மெரினாவில் இன்று மாலை திறக்கப்படும் 'கலைஞர் நினைவிடம்' - சிறப்பம்சங்கள் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.