ETV Bharat / state

பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கு; கோவை நீதிமன்றத்தில் வீடியோக்கள் வைத்து விசாரணை தொடக்கம்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 3:09 PM IST

Pollachi Sexual Harassment Case: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள 9 பேரும் இன்று (பிப்.23) நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலின் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Pollachi Sexual Harassment Case
பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கு

கோயம்புத்தூர்: கடந்த 2019ஆம் ஆண்டு கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைச் சிலர் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவரின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு, சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்தப் பாலியல் வழக்கு விசாரணையானது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதனை அடுத்து, சிபிஐ அதிகாரிகள் தற்போது, இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தனர். இதனிடையே பொள்ளாச்சியைச் சேர்ந்த அருளானந்தம், ஹேரென்பால், பாபு, அருண்குமார் என்கிற மேலும் நான்கு பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இதனால், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்தது. மேலும், கைது செய்யப்பட்ட ஒன்பது பேர் மீதும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கூட்டுச் சதி, மானபங்கம் செய்தல், பெண்கள் கடத்தல், ஆபாச வீடியோ பரப்புதல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட 10 சட்டப் பிரிவுகளில் குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டது.

இதுமட்டும் அல்லாது, இந்த வழக்குத் தொடர்பாக இதுவரை 8 பெண்கள் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும், இந்த வழக்கு விசாரணை கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், நீதிமன்ற வளாகத்தில் பொள்ளாச்சி பாலியல் வழக்கிற்காகத் தனி அறை ஒதுக்கப்பட்டு, மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகக் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் சேலம் சிறையிலிருந்து வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக நீதிபதி முன்பு விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் இன்று (பிப்.23) நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேரையும் காவல் துறையினர் நேரில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடியோக்களை வழக்கறிஞர்கள் முன்னிலையில் ஒளிபரப்பு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அந்த வீடியோவில் உள்ள நபர்கள் யார் யார் என்பதும் அவர்களின் அடையாளங்களைக் கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டும் அல்லாது, இந்த பாலியல் வழக்கில் இரண்டு மாதங்களில் தீர்ப்பு வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: திருப்பத்தூரில் மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; மருத்துவர் தலைமறைவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.