ETV Bharat / state

வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகு நெல்லை காங்கிரஸார் இடையே அதிருப்தி? மறுத்த ராபர்ட் புரூஸ்! - Nellai Congress Candidate

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 5:03 PM IST

Nellai Congress Candidate: கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ் என்பவருக்கு நெல்லையில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதால், வேட்பாளர் அறிவிப்புக்குப் பிறகும் நெல்லை காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் பலர் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Nellai Constituency Congress Candidate Robert Bruce
Nellai Constituency Congress Candidate Robert Bruce

திருநெல்வேலி: தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதையொட்டி திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் கடந்த வாரமே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டனர். ஆனால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி மிகவும் தாமதமாகவே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

அதிலும் குறிப்பாக, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு நெல்லை உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இந்த பத்து தொகுதி தவிர, பிற அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. பின்னர், முதல் கட்டமாக எட்டு தொகுதிகளுக்கு மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவித்தனர்.

ஆனால், நெல்லை தொகுதிகளுக்கு நேற்று (மார்ச் 25) பிற்பகல் வரை வேட்பாளர் அறிவிக்காமல் இருந்தனர். இதன் பின்னணியில், காங்கிரஸ் உட்கட்சி பூசல்கள் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, நெல்லை தொகுதியில் போட்டியிட மூத்த காங்கிரஸ் நிர்வாகி பீட்டர் அல்போன்ஸ், தற்போதைய நெல்லை நாங்குநேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மற்றும் அவரது மகன் அசோக், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் பால்ராஜ் உட்பட பலர் விண்ணப்பித்துள்ளனர்.

இதில், பீட்டர் அல்போன்சுக்கு முதலில் காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் கொடுத்துள்ளது. அதன் பிறகு, ரூபி மனோகரன் தனக்கோ அல்லது தனது மகனுக்கோ கட்டாயம் சீட் வேண்டும் என்று தொடர்ச்சியாக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் அழுத்தம் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாது, செல்வப்பெருந்தகைக்கு, ரூபி மனோகரன் நெருக்கமானவர் என்பதால், ஒரு கட்டத்தில் ரூபி மனோகரனின் மகனுக்கு சீட் வழங்க மாநிலத் தலைமை முடிவெடுத்ததாகக் கூறப்பட்டது. இந்த முடிவை ஏற்றுக் கொள்ளாத நெல்லை காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், டெல்லி தலைமைக்கு புகார் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் டெல்லி தலைமை, தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த நபர்களின் பட்டியலை வாங்கி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம், நேற்று மாலை நாங்குநேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் நெல்லை, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளின் காங்கிரஸ் வேட்பாளர்களை ஸ்டாலின் அறிமுகப்படுத்தி பிரச்சாரம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.

எனவே, நேற்று (மார்ச் 25) மாலைக்குள் கட்டாயம் வேட்பாளர் அறிவிக்க வேண்டும் என்ற பரபரப்பான சூழலில் தான், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ் என்பவரை நெல்லை தொகுதியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என தொடர்ச்சியாக நெல்லை காங்கிரஸ் கட்சியினர் கட்சித் தலைமையை வலியுறுத்தி வருகின்ற சூழலில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட் புரூஸ் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதால், வேட்பாளர் அறிவிப்புக்கு பிறகும் நெல்லை காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், காங்கிரஸ் கட்சியில் நிலவும் கடும் உட்கட்சி பூசல்கள் காரணமாக, வேட்பாளர் அறிவிப்பு ஏற்கனவே தாமதமான நிலையில், வெளியூர் நபர் நெல்லை தொகுதியில் களம் இறக்கப்பட்டிருப்பது, நெல்லை கட்சி நிர்வாகிகளுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கேட்டறிந்து கொள்ள, ஈடிவி பாரத் சார்பில் வேட்பாளர் ராபர்ட் புரூஷை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது பேசிய அவர், "மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, நெல்லையில் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உட்கட்சி பூசல் தற்போது இல்லை. நிர்வாகிகள் அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு தருகிறார்கள். நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 405 பேர் வேட்புமனு தாக்கல்.. எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.