ETV Bharat / state

திமுக கூட்டணியில் யார் எந்த தொகுதி? - கனிமொழி எம்பி அளித்த பதில்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2024, 7:06 PM IST

MP Kanimozhi: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எம்பி கனிமொழி, தேர்தலுக்கான இடங்கள் ஒதுக்கக் கூடிய குழுவில் நான் இல்லை என்றும், மக்கள் பிரச்சினைகள் மாநில உரிமைகளை தேர்தல் அறிக்கையாக தயார் செய்ய உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

MP Kanimozhi
எம்பி கனிமொழி

எம்பி கனிமொழி பேட்டி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "என்.ஐ.ஏ சோதனை மூலம் நாங்கள் பாஜகவின் பி டீம் (B team) இல்லை என்பது உறுதியாகி உள்ளது" என்று தெரிவித்தார்.

அதையடுத்து, திமுகவின் குற்றச்சாட்டில் இருந்து நாங்கள் விடுவிக்கப்பட்டுள்ளோம் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு, "நாங்கள் யாரையும் விமர்சனம் செய்யவில்லை. ஆனால், ஒரு ரெய்டுதான் தீர்மானம் செய்யும் என்றால், அதிமுக - பாஜகவுடனான கூட்டணியில் இருந்தபோதே சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதனால், இந்த ஒரு சோதனையினால் எந்த ஒரு நிலையும் மாறப் போவதில்லை" என்றார்.

தொடர்ந்து, திமுகவின் தேர்தல் அறிக்கை பற்றிய கேள்விக்கு, "ஒவ்வொரு முறை தேர்தல் அறிக்கை தயார் செய்யும்போது மக்களின் குறை நிறைகள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் பின்னரே திமுக, தேர்தல் அறிக்கையை வெளியிடும். அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு படி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின் படி. ஒவ்வொரு துறையில் இருந்து 10 அதிகாரிகள் கொண்ட ஆய்வுக்குழு, ஒவ்வொரு மாவட்டங்களாகச் சென்று மருத்துவர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள், விவசாயிகள், அரசு அலுவலக அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்வர்.

அவர்களின் ஆய்வுகளுக்குப் பின்னர், மக்களின் அனைத்து கோரிக்கைகள் மற்றும் குறைகளைத் தீர்க்கும் வகையில், ஆய்வுக் குழுவின் முடிவுகள் ஒன்றிணைக்கப்பட்ட பின்னரே, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் வெளியிடப்படும். மக்களின் எதிர்பார்ப்புகள் மட்டுமின்றி, மாநில உரிமை குறித்தும் இந்த தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும். தேர்தலுக்கான இடங்கள் ஒதுக்கக்கூடிய குழுவில் நான் இல்லை. அந்தக் குழுவில் இருப்பவர்களுக்கே அதன் விவரங்கள் தெரியும். யார் எந்த தொகுதியில் நிற்பார் என்றும், எத்தனை தொகுதி என்றும் கட்சித் தலைவரே முடிவெடுப்பார்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "அமலாக்கத்துறைக்கு கதவை தட்ட வேண்டிய கஷ்டம் வேண்டாம்" - அண்ணாமலைக்கு அமைச்சர் துரைமுருகன் பதிலடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.