ETV Bharat / state

தாயும் மகளும் போட்டாபோட்டி.. போடி குடும்பத்தின் சாதனை படிக்கட்டுகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 10:16 PM IST

Updated : Mar 8, 2024, 11:04 PM IST

Mother and daughter studying higher education in same family: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி பயிற்சி போன்ற தொழிற்பயிற்சி கல்வியிலும், இந்தி மற்றும் உயர்கல்வி போன்றவைகளில் பயின்று சான்றிதழ்கள் பெற்று பாராட்டைப் பெற்று வருகின்றனர்.

Mother and daughter studying higher education in same family
ஒரே வீட்டில் தொழிற்பயிற்சி, ஹிந்தி முடித்து..உயர்கல்வி பயிலும் தாய் மற்றும் மகள்

தாயும் மகளும் போட்டாபோட்டி.. போடி குடும்பத்தின் சாதனை படிக்கட்டுகள்

தேனி: தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் வசித்து வருபவர், பரமசிவம். இவரது மனைவி மணிமேகலை (38). இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். இவரது மகள் அபிராமி. இவர் தட்டெழுத்து பயிற்சியில் கொண்ட ஆர்வம் காரணமாக, ஆறாவது வகுப்பு பயிலும்போதே தட்டெழுத்து பயிற்சியில் சேர்க்கப்பட்டு பயின்று வந்துள்ளார்.

தினமும் பள்ளிக்கல்வி முடித்து, தொழிற்கல்வி பயிற்சிக்கு தனியாகச் செல்லாமல், துணைக்கு தன் தாயார் மணிமேகலையையும் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தனது மகள் பயிலும் தட்டெழுத்தைக் கண்டு, தானும் நேரத்தை வீண் செய்யாமல் தட்டெழுத்து பயிலும் முயற்சியை தாயார் மேற்கொண்டுள்ளார்.

அரசு முறைப்படி பத்தாம் வகுப்பு முடித்த பின்னரே தொழிற்கல்வியில் தேர்வு எழுத முடியும் என்ற விதிமுறை இருப்பதால், அபிராமி தன் தாயார் மணிமேகலையுடன் 15வது வயதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டெழுத்து இளம் பயிற்சியில் தேர்வு எழுதி, முதல் நிலையில் வெற்றி பெற்றுள்ளார். அவருடன் தேர்வுக்குச் சென்ற தாயார் மணிமேகலையும், தமிழ் மற்றும் ஆங்கில தட்டெழுத்து பயிற்சியில் இளநிலை சான்றிதழ் பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இருவரும் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் தட்டெழுத்து உயர்நிலை பயின்று, அதிலும் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடர்ந்து இருவரும் தொழிற்கல்வி மீது கொண்ட ஆர்வம் காரணமாக, சுருக்கெழுத்து பயிற்சியிலும் தனது ஆர்வத்தை செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில், அபிராமி ஆங்கிலம் மற்றும் தமிழ் சுருக்கெழுத்து பயிற்சிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பயிற்சி வகுப்புகளில் மாவட்ட அளவில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். இவரது தாயார் மணிமேகலை, சுருக்கெழுத்து பயிற்சிகளில் இளநிலை சான்றிதழ் பெற்ற நிலையில், தற்போது முதுநிலை தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில், இவரது மகள் அபிராமி அதிவேக சுருக்கெழுத்து பயிற்சி போட்டிக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். மேலும், கணிப்பொறி அறிவியலும் பயின்று இருவரும் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், இந்தி மொழியிலும் இருவருமே பிராத்மிக் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளனர்.

தற்போது அபிராமி இளநிலை கணிப்பொறி பொறியியல் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரது தாயார் மணிமேகலை இளநிலை தமிழ் முதலாம் ஆண்டு தொலைதூரக் கல்வி மூலம் பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே வீட்டில் வசித்து வரும் தாய், மகள் இருவரும் தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கணிப்பொறி இளநிலை மற்றும் முதுநிலைகளில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்றது குறித்து இப்பகுதியில் உள்ள அனைவரும் இவர்களைப் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: “நாங்களும் பெட்டி வைப்போம்”.. கோவை தெற்கு பாஜக வைத்துள்ள பெட்டியின் பின்னணி என்ன?

Last Updated :Mar 8, 2024, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.