ETV Bharat / state

“போதைப்பொருள் அதிகமாக இருப்பது குஜராத்தில்தான்”.. அமைச்சர் ரகுபதி தாக்கு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 10, 2024, 2:27 PM IST

Updated : Mar 10, 2024, 3:59 PM IST

Minister Regupathy: போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிகிற்கு பிப்ரவரி 15ஆம் தேதி 'லுக் அவுட் நோட்டீஸ்' அனுப்பப்பட்ட நிலையில் பிப்.21ஆம் தேதி மங்கை திரைப்பட நிகழ்ச்சியில் ஜாபர் சாதிக் பங்கேற்றபோது மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு எங்கே சென்றது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

Minister Regupathy
அமைச்சர் ரகுபதி

அமைச்சர் ரகுபதி

சென்னை: தமிழ் சினிமா தயாரிப்பாளரான ஜாபர் சாதிக், டெல்லியில் நடந்த போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் நேற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் டெல்லியில் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் அரசியல் வாதிகள் பலருக்கு தொடர்பு இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தில் திமுகவை, பாஜகவினர் மற்றும் அதிமுகவினர் விமர்சித்து வரும் நிலையில், அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் திமுக மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி ஆகியோர் கூட்டாக இன்று (மார்ச் 10) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமைச்சர் ரகுபதி பேசுகையில், திமுகவை களங்கப்படுத்த பாஜக செய்யும் அரசியல் தமிழ்நாட்டிலும், அகில இந்திய அளவிலும் எடுபடாது.

வருமானவரித்துறை, அமலாக்கதுறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைத்த பாஜக இப்போது மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவையும் புதிதாக களத்தில் இறக்கி உள்ளது. அதற்கு துணையாக அதிமுகவும் துதி பாடிக்கொண்டிருக்கிறது. போதைப்பொருள் வழக்கில் ஜாபர் சாதிகிற்கு பிப்ரவரி 15ஆம் தேதி 'லுக் அவுட் நோட்டீஸ்' அனுப்பப்பட்ட நிலையில் பிப்.21ஆம் தேதி மங்கை திரைப்பட நிகழ்ச்சியில் ஜாபர் சாதிக் பங்கேற்றபோது மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு எங்கே சென்றது?

ஜாபர் சாதிக் கைது; அரசியல் பின்னணி என்ன?: ஜாபர் சாதிக் கைதும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவின் செய்தியாளர் சந்திப்பும் முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக தான், ஒரு விசாரணை அமைப்பின் துணை இயக்குனர் செய்தியாளர்களை சந்திக்கிறார். ஒரு விசாரணை முழுமையாக நடைபெற்ற பிறகு செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் அதற்கு முன்னதாகவே செய்தியாளர்களை சந்திக்கிறார்கள்.

திமுக அரசை கொச்சைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் செய்தியாளர்களை சந்தித்தார்கள். 2013ஆம் ஆண்டு ஜாபர் சாதிக் மீது ஒரு வழக்கு வந்தது. அன்று அதிமுக சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. அன்று ஜாபர் சாதிக்கை எடப்பாடி கே.பழனிசாமியை காப்பாற்றினார். போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருப்பது குஜராத் மாநிலம்தான். தேர்தல் வரும்போது, ஏதாவது ஒரு பொய்யான குற்றச்சாட்டை திமுக மீது பாஜக போடுகிறது.

தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை முழுக்க முழுக்க தடுத்து வைத்திருக்கிறோம். ஜாபர் சாதிக் வழக்கில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதும் கூட தமிழகத்தில் இல்லை மற்ற மாநிலங்களில்தான்” என்றார். தொடர்ந்து, திமுக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் பேசுகையில், “போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுக்க திமுக அரசு எடுக்கப்பட்ட நடவடிக்கை போல எந்த ஒரு கட்சியும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த வழக்கு தொடர்பாக ஆதாரம் இல்லாமல் திமுகவினர் மீது குற்றம்சாட்டுபவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடருவோம். மத்திய அரசு ஜாபர் சாதிக் மீது நடவடிக்கை எடுத்தால், அதை நாங்கள் வரவேற்கிறோம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: விருப்பமனு தாக்கல் செய்த 2,984 பேர்! திமுக சார்பில் போட்டியிட 21 பேரை நேர்காணலில் தேர்வு செய்யும் மு.க.ஸ்டாலின்

Last Updated :Mar 10, 2024, 3:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.