ETV Bharat / state

பள்ளிகளிலேயே ஆதார் பதிவு செய்யும் திட்டம் - அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 23, 2024, 4:22 PM IST

Aadhaar camps: நாட்டில் முதன் முறையாக பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக ஆதார் பதிவு செய்யும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

free Aadhaar registration for students at school
மாணவர்களுக்கு இலவசமாக ஆதார் பதிவு செய்யும் திட்டம்

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்யும் திட்டம் துவங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், தமிழ்நாட்டிலேயே முதன் முறையாக கோவை காளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்யும் திட்டத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

இதன் மூலம், தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலேயே ஆதார் எண்ணுடன் கூடிய அட்டையைப் பயன்படுத்த வசதியாக பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்துக் கொள்வதற்கு வசதியாக இந்த திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் செயல்பட எல்காட் மூலமாக சுமார் 770 ஆதார் பதிவு மின்னனுக் கருவிகள் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

அனைத்து பள்ளிகளிலும் பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள், புதியதாக பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுவரை பதிவு செய்யாத மாணவர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் பதிவு செய்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் அரசின் பல்வேறு திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, பள்ளி மாணவர்களுக்கான சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், அவர்களது பெற்றோரின் வருமானச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்ய அதிகாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு மாத காலத்தில் அதற்கான வசதிகள் பள்ளிகளிலேயே ஏற்படுத்தி தரப்படும். இன்று நான்காவது பெற்றோர் மாநாடு கோயம்புத்தூரில் நடைபெற்று வருகிறது. திருப்பூர், நீலகிரி, ஈரோட்டைச் சேர்ந்த பெற்றோர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். இது போன்ற மாநாட்டின் வாயிலாக, முதலமைச்சர் கொண்டு வந்த திட்டங்கள் பெற்றோருக்கு தெரியப்படுத்தும் விழிப்புணர்வாக அமைந்துள்ளது.

50க்கும் மேற்பட்ட திட்டங்கள் அவர்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் அரசுப் பள்ளிகளுக்கு பெற்றோர் தரப்பில் நன்கொடை வழங்கப்பட்டு இருக்கிறது. மதுரையைச் சேர்ந்த பெண் ஒருவர் பள்ளிகளுக்கு நன்கொடை கொடுத்ததைப் போல, நிறைய பேர் கொடுக்க முன் வருகின்றனர். நன்கொடை தந்தவர்களை அழைத்து கவுரவிக்கப்படுவதன் வாயிலாக அவர்கள் மகிழ்ச்சி அடைவது எங்களை ஊக்கப்படுத்துகிறது.

இந்த 4 மாவட்டத்தில் மட்டும் இதுவரை அரசுப் பள்ளிகளுக்கு ரூ.448 கோடி மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. பலர் 1 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களை நன்கொடையாக வழங்க பத்திரங்களை கொடுத்துச் சென்றுள்ளனர். அடுத்ததாக காஞ்சிபுரத்தில் 5வது பெற்றோர் மாநாடு நடைபெற உள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஊக்கம் தருவதன் அடிப்படையில், அந்த மாநாட்டை சிறப்பாக நடத்த ஏற்பாடு நடக்கிறது" எனத் தெரிவித்தார்.

முன்னதாக அரசு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டங்கள் தொடர்பாக அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டார். மேலும் இந்நிகழ்ச்சியில், பள்ளிகல்வித்துறை அரசு செயலாளர் குமரகுருபரன் உள்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: "மெத்தனமாக இருந்து விடாதீர்கள்!"- ஸ்டாலின் விடுத்த எச்சரிக்கை! கலக்கத்தில் நிர்வாகிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.