ETV Bharat / state

மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவலர்கள்; ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 7:46 AM IST

Madras High Court: மனித உரிமை மீறலில் ஈடுபட்ட சிபிசிஐடி ஆய்வாளர் மற்றும் சென்னை எம்.கே.பி. நகர் காவல் நிலைய பெண் ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Madras High Court
Madras High Court

சென்னை: சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்த கணவரை இழந்த சித்ரா என்பவர் தனக்குச் சொந்தமான 8 வீடுகளைக் கொண்ட கட்டிடத்தில் மகனுடன் வசித்து வந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயந்தி என்பவர், தனது கணவர் உமாசங்கர் மற்றும் அடியாட்களுடன் வந்து வீடுகளை காலி செய்து, ஒப்படைக்கும்படி சித்ராவையும், வாடகைதாரர்களையும் மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பான புகாரில் நடவடிக்கை எடுக்காத போலீசார், ஜெயந்தி அளித்த புகாரில் எம்கேபி நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பத்மாவதி, சிபிசிஐடி ஆய்வாளர் கல்வியரசன் ஆகியோர் தாயையும், மகனையும் கைது செய்துள்ளனர்.

இருவரையும் சிறையிலடைக்க, எழும்பூர் நீதிமன்றமும், நில அபகரிப்பு தடுப்பு வழக்குகளுக்கான நீதிமன்றமும் மறுத்தன. மேலும், இருவரையும் விடுவிக்க உத்தரவிட்டுள்ளனர். தங்களுக்கு எதிரான இந்த மனித உரிமை மீறல் குறித்து சென்னையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் சித்ரா அளித்த புகாரை விசாரித்த ஆணையம், '5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும், அந்த தொகையை இரண்டு காவல்துறையினரிடமும் தலா இரண்டரை லட்ச ரூபாய் வசூலிக்கவும், இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசுக்குப் பரிந்துரை' செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி கல்வியரசனும், பத்மாவதியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் அமர்வு, மனித உரிமைகள் ஆணைய உத்தரவை எதிர்த்த வழக்கில் எந்தவித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், தமிழக அரசு இதுவரை ஒழுங்கு நடவடிக்கை எடுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்தனர்.

எவ்வித திடமான ஆதாரங்கள் இல்லாத நிலையில், தாய் மற்றும் மகனை சிறையில் அடைக்க ஒவ்வொரு நீதிமன்றமாக முயற்சித்ததன் மூலம் காவல் துறையினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது நிரூபணமாவதாகக் கூறி, மனித உரிமை ஆணைய உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டதுடன், இருவரின் வழக்குகளையும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். மேலும், இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, 6 மாதங்களில் விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி பதவியேற்றார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.