ETV Bharat / state

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழப்பு.. சென்னையில் மருத்துவ மாணவர் எடுத்த விபரீத முடிவு! - Suicide due to online rummy

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 16, 2024, 3:30 PM IST

Student lost money in online rummy: ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த நிலையில், மருத்துவ மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட தனுஷ் புகைப்படம்
தற்கொலை செய்து கொண்ட தனுஷ் புகைப்படம் (Credits to ETV Bharat Tamil Nadu)

சென்னை: மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர், ஆன்லைன் ரம்மி விளையாடி தொடர்ந்து பணத்தை இழந்து உள்ளார். இந்த நிலையில், இன்று (மே 16) அவரது வீட்டிலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடசென்னை கொருக்குப்பேட்டை ஜேஜே நகரைச் சேர்ந்தவர் தனுஷ். இவர் ஆவடியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பிசியோதரபி மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவர் சில நாட்களாக ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். அவ்வாறு விளையாடியதில் அதிக அளவிலான பணத்தை இழந்துள்ளார். இழந்த பணத்தை மீண்டும் பெறுவதற்காக அவர் தொடர்ந்து விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக தான் இழந்த பணத்தை மீட்டெடுக்க, தனது தந்தையிடம் 24 ஆயிரம் ருபாய் பணம் கேட்டுள்ளார். ஆனால், அவரது தந்தை 4 ஆயிரம் மட்டுமே வங்கிக் கணக்கு மூலம் பரிமாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், பணத்துடன் அறையின் உள்ளே சென்று கதவை தாழிட்டுக்கொண்ட தனுஷ், இறுதியாக அப்பணத்தை வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடி, அந்த பணத்தையும் இழந்ததாக கூறப்படுகிறது. இதில் தனுஷ் மிகுந்த மன வேதனையடைந்துள்ளார்.

இதனையடுத்து, தனுஷ் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த தனுஷின் தங்கை, கதவைத் தட்டிப் பார்த்துள்ளார். ஆனால் அவர் கதவை திறக்காததால், அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அப்போதும் தனுஷ் கதவை திறக்காததால் குடும்பத்தினர் ஆர்கே நகர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து வீட்டிற்கு வந்த போலீசார், கதவை உடைத்து பார்த்துள்ளனர்.

அப்போது தனுஷ் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து, போலீசார் தனுஷின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: திருடு போன 398 செல்ஃபோன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு -ஆவடி போலீஸ் அதிரடி! - Avadi Theft Things Handover

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.