ETV Bharat / state

"காடு, மலைகளை அழிப்பவர்களை வெட்டுவேன்" - நடிகர் மன்சூர் அலிகான் மிரட்டல் பிரச்சாரம்! - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 3, 2024, 4:05 PM IST

Mansoor Ali Khan Campaign: காடு மற்றும் மலைகளை அழிப்பவர்களை வெட்டுவேன் என்று வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மன்சூர் அலிகான், தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Mansoor Ali Khan Campaign
Mansoor Ali Khan Campaign

Mansoor Ali Khan Campaign

திருப்பத்தூர்: இந்தியா முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், தமிழ்நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பல்வேறு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிரமாக வாக்குகளைச் சேகரிப்பதற்கு வாக்காளர்களைச் சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வித்தியாசமான பல்வேறு உத்திகளையும் பிரச்சாரத்தில் கையாண்டு வருகின்றனர்.

அந்த வகையில், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மக்களவைத் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் பலாப்பழச் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனை அடுத்து, மன்சூர் அலிகான் வேலூர் தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இந்த பிரச்சாரத்தின் பொழுது பேசிய மன்சூர் அலிகான், "இந்த மாவட்டத்தில் உள்ள காடு, மலை அழித்து வருகின்றனர். நான் இந்த தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன், நான் தான் வெற்றி பெறுவேன்.

வெற்றி பெற்று வந்து காடு, மலைகளைக் காப்பாற்றி, நீர் நிலைகள் அமைப்பேன். மற்றவர்களைப் போல் ஐந்து வருடம் காணாமல் போகமாட்டேன் இங்கேயேதான் இருப்பேன். மேலும், காடு மற்றும் மலைகளை அழிப்பவர்களை வெட்டுவேன்" என்று கூறினார்.

இதுமட்டும் அல்லாது, அங்கிருந்த செய்தியாளர்களைப் பார்த்து, "இது தான் இன்றைக்கு ஹெட் லைன் போட்டுக்கொங்க" எனவும் "இப்படிப் பேசினால், என் மீது இறையாண்மைக்கு எதிராகப் பேசினேன் என வழக்குப் போடுவார்கள், போடட்டும்" என்றும் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, வாணியம்பாடி சந்தை, ஆற்றுமேடு, உள்ளிட பல பகுதிகளில் மன்சூர் அலிகான் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது முதியவர் ஒருவர், மன்சூர் அலிகானுக்கு சால்வை அணிவிக்க வந்த போது, பிரச்சார வாகனத்திலிருந்து கீழே இறங்கி முதியவர் அணிவித்த சால்வையை அவருக்கே அணிவித்து, அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.

இந்த நிலையில், "காடு மற்றும் மலைகளை அழிப்பவர்களை வெட்டுவேன்" என்று மன்சூர் அலிகான் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "இந்திய ஜனநாயகத்தை உடைக்க விட்டுவிடாதீர்கள்" - மதுரை தேர்தல் களத்தில் நடிகை ரோகிணி அளித்த சிறப்பு பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.