ETV Bharat / state

கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்கம்: உயர் நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 9, 2024, 3:25 PM IST

Updated : Feb 10, 2024, 6:21 AM IST

Kilambakkam Bus Terminus: கோயம்பேடு பேருந்து முனையத்தின் அருகில் ஆம்னி பேருந்து நிறுவனங்களின் பணிமனைகளை பொதுமக்கள் ஏற்கனவே பயன்படுத்தியுள்ளதால், மறு உத்தரவு வரும்வரை, அந்த இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க பயன்படுத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை
கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை

சென்னை: சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக துவங்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்துதான் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அனைத்து தனியார் பேருந்துகளும் இயக்கப்பட வேண்டும் என்று, ஜனவரி 24ஆம் தேதி போக்குவரத்துத் துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் பேருந்து நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, எந்தெந்த வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகள், பயணிகளை ஏற்றி இறக்க அனுமதி வழங்கப்படும் என்பது குறித்தும், மாற்று வழித்தடங்களை அடையாளம் கண்டு, வரைபட அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மாதவரம், "ரெட்டேரி பகுதியில் சில ஆம்னி உரிமையாளர்கள் பணிமனைகள் வைத்துள்ளனர். அவர்கள் சூரப்பட்டு பகுதியை ஏற்கிறார்கள், மற்றவர்கள் ஏற்க எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

கோயம்பேட்டில் இருந்து தற்காலிகமாக மட்டுமே ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. நிரந்தரமாக இயக்க அனுமதிக்க முடியாது. தனியார் பேருந்துகளின் பிரச்னையைத் தீர்க்க மார்ச் 31-க்குள் ஆம்னி பேருந்துகளுக்கான பணிமனைகள் கட்டுமானப் பணிகள் கிளாம்பாக்கத்தில் முடிந்துவிடும்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதி மஞ்சுளா பிறப்பித்த உத்தரவில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாக பயன்படுத்தப்பட்டு, ஆம்னி பேருந்துகள் முடிச்சூர் கேரேஜுக்கு மாற்றப்பட்டு விட்டால், கோயம்பேட்டில் இருந்து தான் பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை முடிவுக்கு வந்து விடும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிறுவனங்களின் கேரேஜ்கள் பொது மக்களின் வசதிக்காக பயன்படுத்தப்பட்டதால், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை அதனை தொடர்ந்து அனுமதிக்கலாம். அதேபோல், போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றிக் கொள்ளலாம்.

தென் மாவட்டங்களுக்குச் செல்லும் எந்த ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி, இறக்காமல் இயக்க கூடாது. ஆன்லைன் மற்றும் மொபைல் ஆப்-களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகள் ஏற்றி, இறக்க வேறு இடங்களை குறிப்பிடக் கூடாது. மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த இடைக்கால ஏற்பாடுகளை தொடரலாம்" என உத்தரவிட்டு, வழக்கை இறுதி விசாரணைக்காக ஏப்ரல் 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: “போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கு மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகமே காரணம்” - மாற்றுத்திறனாளி இளைஞர் ஸ்ரீகாந்த்!

Last Updated : Feb 10, 2024, 6:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.