ETV Bharat / state

குத்தகை வீடுகளை அடமானம் வைத்து மோசடி; விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு! - lease agreement Swindling Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 28, 2024, 9:45 PM IST

Create awareness among peoples Swindling lease agreement: குத்தகைக்கு எடுக்கும் வீடுகளை முறைகேடாக அடமானம் வைத்து மோசடி செய்வது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mhc-says-create-awareness-among-peoples-swindling-lease-agreement-in-name-of-mortgage
குத்தகை வீடுகளை அடமான வைத்து மோடி செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...

சென்னை: தனது வீட்டை குத்தகைக்கு எடுத்த ராமலிங்கம், தனக்குத் தெரியாமல் அந்த வீட்டை அடமானம் வைத்து மோசடி செய்ததாக, சென்னை முகப்பேரைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் புகாரளித்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராமலிங்கத்திற்கு, கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், ஜாமீனை ரத்து செய்யக் கோரி கனகராஜ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சமீப காலங்களில் இதுபோன்ற முறைகேடு புகார்கள் அதிகரித்து வருவது குறித்து விளக்கம் அளிக்கும்படி அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து, அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், இதுபோன்ற முறைகேடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் அதிகார எல்லைக்குள் மட்டும் 40 வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும், அதில் ஏழு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டு, 67 வீட்டு உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தாம்பரம் காவல் ஆணையர் அதிகார எல்லைக்குள் பதிவு செய்யப்பட்ட ஒன்பது வழக்குகளில், 13 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளதாகவும், அதில் 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவடி காவல் ஆணையர் அதிகார எல்லைக்குள் பதிவான 4 வழக்குகளில், 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளதாகவும், அதில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 4 வழக்குகள் பதிவு செய்துள்ளதாகவும், அதில், ஆயிரத்து 20 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 41 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து உத்தரவு பிறப்பித்த நீதிபதி, 65 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளதாக கூறியுள்ள நிலையில், இந்த மோசடி கும்பல், அடுத்தவர்கள் சொத்தை அடமானம் வைத்து பணத்தை எல்லாம் சுருட்டிய பின்னர், இது சிவில் பிரச்சினை என திசைத் திருப்பி, மோசடி கும்பல் வழக்கை இழுத்தடிப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். சட்டத்தை தெளிவாக போலீசார் புரிந்து கொள்ளாததால், 2013-ஆம் ஆண்டில் பதிவான மோசடி வழக்கில் கூட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் உள்ளதாகவும் நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற மோசடி வழக்குகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ள நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, அதனால் இந்த மோசடி கும்பல் குறித்தும், மோசடி குறித்தும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

எனவே, இந்த வழக்கில் டி.ஜி.பியை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்த்த நீதிபதி, இதுபோன்ற மோசடியைத் தடுக்க டி.ஜி.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவால் காவல் நீட்டிப்பு! நீதிமன்றத்தில் காரசார வாதம்- என்ன நடந்தது? - Arvind Kejriwal Custody Extend

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.