ETV Bharat / state

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு முனைப் போட்டி.. வெற்றி வாய்ப்பு யாருக்கு? - viluppuram Lok sabha constituency

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 24, 2024, 10:57 AM IST

Lok sabha polls Viluppuram constituency: விழுப்புரம் தொகுதியில் திமுக, அதிமுக, பாமக, நாதக என நான்கு முனை போட்டி நிலவும் நிலையில், வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகமாகப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Lok sabha polls viluppuram constituency
Lok sabha polls viluppuram constituency

விழுப்புரம்: பெருமளவு விவசாய நிலங்களைக் கொண்ட விழுப்புரம் மாவட்டம், விவசாய பூமியாகத் திகழ்கிறது. இங்குள்ள 80 சதவிகித மக்கள் விவசாயத்தையே நம்பியுள்ளனர். தமிழகத்தில் பாயும் முக்கிய நதியான தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் நெல், கரும்பு முதலான பயிர்களை விதைத்து, சாகுபடி செய்து தங்கள் தினசரி வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர், இம்மக்கள்.

நெல் ஆலை, கரும்பு ஆலை எனப் பெயர் சொல்லும் அளவிற்கு மட்டுமே இங்கு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருக்கும் மக்கள் அனைவரும், சென்னை மற்றும் புதுவை ஆகிய பகுதிகளுக்கு தினசரி வேலைகளுக்கு சென்று வரும் சூழலே இன்றளவும் உள்ளது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழக்கக்கூடிய கனரக தொழிற்சாலைகள் எதுவும் இங்கே சொல்லும் படி அமையவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

கரும்பு விவசாயத்தில் தமிழகத்தின் முன்னோடியாக திகழும் விழுப்புரம் மாவட்டத்தில், அதனை அறுவடை செய்வதற்கான நவீன இயந்திரங்கள் தற்போது வரை மத்திய அரசால் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் விழுப்புரம் வாக்காளர்கள் இடையே உள்ளது. சவுக்கு விவசாயமும் இங்கே ஒரு முக்கியத் தொழிலாக உள்ளது.

ஆனால் அதற்கு ஏற்றார் போல, ஏற்றுமதி செய்வதற்கு அண்டை மாநில முதலாளிகளை நம்பியே இங்கு விவசாயம் உள்ளது. மேலும், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக காகித தொழிற்சாலை, விழுப்புரம் பகுதியில் அமைய வேண்டும் என்று ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

திருக்கோவிலூர் ரயில்வே சந்திப்பில், இதற்கு முன்னதாக திருக்கோவிலூர் முதல் தாம்பரம் வரை தினசரி ரயில் இயக்கப்பட்டு வந்த நிலையில், ரயில் தண்டவாளங்கள் சீரமைப்பு பணி காரணமாக, இந்த தினசரி ரயிலானது நிறுத்தப்பட்டது. எனவே, இங்குள்ள பொதுமக்களுக்கு தினசரி சென்னை செல்ல சிரமமாக உள்ளதால், மீண்டும் திருக்கோவிலூர் முதல் தாம்பரம் வரையிலான பயணிகள் ரயில் சேவையை இயக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் உள்ளது.

உளுந்தூர்பேட்டை நகரமானது சென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய தமிழகத்தின் முக்கிய பல நகரங்களை இணைக்கும் சாலை சந்திப்பாக உள்ளது. இங்கே புதிய பேருந்து நிலையம் ஒன்று கட்டித்தர வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

விழுப்புரம் தனித் தொகுதி: சிலிக்கான், செம்மண் போன்ற கனிமவள தாதுக்கள் நிறைந்த வளம்மிக்க மண்ணாக விழுப்புரம் மாவட்டம் திகழ்கிறது. 7 லட்சத்து 40 ஆயிரத்து 412 ஆண் வாக்காளர்களும், 7லட்சத்து 53 ஆயிரத்து 618 பெண் வாக்காளர்களும், 209 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தமாக 14 லட்சத்து 94 ஆயிரத்து 259 வாக்காளர்களைக் கொண்டது விழுப்புரம் நாடாளுமன்ற தனித் தொகுதி. திண்டிவனம் பொது தொகுதியாக இருக்கும் வரை, இங்கு காங்கிரஸ் கட்சியானது நான்கு முறை வெற்றிவாகை சூடியுள்ளது.

2009ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பில் விழுப்புரம் தனித் தொகுதியாக உருவாக்கப்பட்டது. ஆரோவில் சர்வதேச நகரம் திருவக்கரை கல்மரப் பூங்கா, தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரங்களில் கிடைக்கும் பழமை வாய்ந்த சிலைகள், உளுந்தூர்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மிகவும் பழமையான உளுந்தாண்டார் கோயில் சிவன் கோயில், திருக்கோவிலூர் சுற்றிய அமைந்துள்ள பழமை வாய்ந்த கோவில்கள், என பன்முகத்தன்மை கொண்ட தொகுதியாக விழுப்புரம் நாடாளுமன்ற தனித் தொகுதி விளங்கி வருகிறது.

திண்டிவனம் (பொது) மக்களவைத் தொகுதி கடந்த 2009ஆம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்டு, விழுப்புரம் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. அதன் பின்னர், கடந்த 2009 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில், அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்று கவனம் ஈர்த்தனர். இதனால், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி 'அதிமுகவின் கோட்டை' என்றே கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 2019-ல் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தை கட்சிக்கு, தனித் தொகுதிகளான சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விசிகவைச் சேர்ந்த 'ரவிக்குமார்', அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை சுமார் 11% வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம், இது திமுக பொன்முடியின் ஆதரவு பெற்ற தொகுதி என மக்களிடையே ஆச்சரியப்பட வைத்தார்.

நான்குமுனை போட்டி: 2024 மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக, பாமக, நாதக என நான்கு முனை போட்டி தமிழகத்தில் நிலவுகிறது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விழுப்புரம் தொகுதியில் எந்த கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றி வாகையை சூடுவார்? என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.

அதிமுக: விழுப்புரம் தொகுதியானது, இம்முறை அதிமுக கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் கட்சிக்கு ஒதுக்கப்படும் என பேசப்பட்டு வந்த நிலையில், மீண்டும் தன்னுடைய பலம் என்ன என்பதை நிரூபிக்க அதிமுக இத்தொகுதியில் நேரடியாக களம் காண்கிறது.

அதாவது, இரண்டு முறை தொகுதியில் வெற்றி வாகை சூடியதால், தங்களுக்கே விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி வாய்ப்பு உறுதியாக கிடைக்கும் என விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த கந்தலவாடி பாக்யராஜ் என்பவரை வேட்பாளராக அறிமுகப்படுத்தி உள்ளது அதிமுக.

இதையடுத்து, விழுப்புரத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடத்திய புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி, தாங்கள் கேட்டது விழுப்புரம் தொகுதியை மட்டுமே என்றும் அந்த ஒரு தொகுதியைக்கூட எங்களுக்கு தரவில்லை என்றால், கூட்டணியில் இருந்து பிரிந்து செல்வோம் என சமீபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

திமுக: இதேபோன்று விழுப்புரம் தொகுதியானது, திமுகவின் கோட்டை என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் கை அசைவிற்கு கட்டுப்படும் நாடாளுமன்றத் தொகுதி எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், திமுக கூட்டணி கட்சியான விசிக சார்பில், கடந்த 2019-ல் வெற்றி பெற்ற ரவிக்குமாரையே மீண்டும் களம் இறக்கி வெற்றிக்காக காத்துக் கொண்டிருக்கிறது, திமுக.

மேலும், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ரவிக்குமார், 'உதயசூரியன்' சின்னத்தில் நின்றதால் மட்டுமே வெற்றி பெற்றார் என பேசப்பட்டு வந்தது. ஆகவே, இம்முறை விசிகவின் சின்னமான 'பானை' சின்னத்திலேயே நின்று வெற்றி பெறுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.

பாமக: கடந்த தேர்தலில் விசிகவை விட குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோற்ற வடிவேல் ராவணனுக்கு பதிலாக, பாமக புதுமுகமான முரளி சங்கர் என்பவரை வேட்பாளராக களமிறக்கியுள்ளது. இதனால், விசிகவின் ரவிக்குமாருக்கும், பாமகவின் முரளி சங்கருக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

நாதக: இவர்கள் எல்லாம் ஒரு புறமிருக்க, யாருடனும் கூட்டணி கிடையாது, மக்களோடு மட்டுமே கூட்டணியென, நாம் தமிழர் சீமான் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே இயக்குநர் களஞ்சியத்தை விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக முன்மொழிந்தார். அதன்படி, விழுப்புரம் தொகுதியில் இயக்குநர் களஞ்சியம் போட்டியிடுகிறார்.

யாருக்கு வெற்றி?: விழுப்புரம் தொகுதியில் திமுக, அதிமுக, பாமக, நாதக என நான்குமுனை போட்டி நிலவும் நிலையில், பாமகவின் மாம்பழ சின்னமா? விசிகவின் பானை சின்னமா? அல்லது அதிமுகவின் இரட்டை இலையா? நாதகவின் மைக் சின்னமா? என யாருக்கு வெற்றி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மார்ச் 30ஆம் தேதி, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், ஏப்ரல் 5ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், நேரடியாக விழுப்புரம் தொகுதிக்கு வந்து விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளனர்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து திமுக அரசு மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்து வருவதுடன், தேர்தல் வரும் நேரங்களில் மட்டுமே பாமகவிற்கு தமிழ் மீது பற்று வரும் என நேரடியாக பாமகவை விமர்சித்துள்ளார்.

வன்னியர் மக்களும், பட்டியலின மக்களும் சம அளவில் வாழும் தொகுதியாக பார்க்கப்படும் விழுப்புரமானது, திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை மற்றும் விழுப்புரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. விவசாயம், கட்டிட வேலை போன்ற தொழில்களையே முக்கிய ஆதாரமாக கொண்டு வாழும் தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியும் ஒன்று.

மரக்காணம் கள்ளச்சாராய விவகாரம், அன்பு ஜோதி ஆசிரம விவகாரம், மாணவர்கள் தொடர் படிக்கட்டு பயணம், கஞ்சா, போதை ஊசிகள், தினசரி குட்கா பறிமுதல் என தமிழகத்தில் திரும்பிப் பார்க்க வைத்த ஹைலைட்ஸ் செய்திகள் அனைத்தும், விழுப்புரம் தொகுதியில் இருந்து இணையத்தை தன் வசப்படுத்தியது என்றே கூறலாம்.

திமுகவைச் சேர்ந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அதிமுகவை சேர்ந்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், இது எங்களோட பூர்வீக மாவட்டம் என தைலாபுரம் பகுதியை சேர்ந்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ், நாங்க இந்த மக்களோடு பிள்ளைகள் என மார்தட்டிக்கொள்ளும் நாதக சீமான் ஆகியோரின் தேர்தல் பரப்புரை இன்னும் சில நாட்களில் இங்கு தொடங்கவிருக்கிறது.

இது விழுப்புரம் நாடாளுமன்ற தனித் தொகுதியில் நடைபெறும் தேர்தலா? அல்லது தமிழகத்தின் தனித் தொகுதியில் நடைபெறும் திருவிழாவா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: “அது பம்மாத்து அறிக்கை” - அதிமுக அறிக்கையை விமர்சித்த மு.க.ஸ்டாலின்! - MK STALIN SLAMS BJP AND AIADMK

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.