ETV Bharat / state

எட்டாம் வகுப்பு சமூக அறிவியலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பாடம்! - TN EX CM KARUNANITHI

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 3:36 PM IST

Ex Cm Karunanidhi: எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தின் குடிமையியல் பகுதியில், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை சட்டம் கொண்டு வருவதற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட முயற்சிகள் குறித்த தகவல்கள் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளன.

8ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் மற்றும் கருணாநிதி புகைப்படம்
8ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் மற்றும் கருணாநிதி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu and DMK official Website)

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தின்கீழ், புதிய பாடத்திட்டத்தின் முதல் பதிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்தில் கடந்த 2020, 2022, 2023ஆம் ஆண்டுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டன.

கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பின்னர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு 9ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் பாடமாக சேர்க்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் நடப்பாண்டில் உரைநடை பகுதியில் 'பன்முக கலைஞர்' என்ற தலைப்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பல்வேறு திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், தற்போது 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் குடிமையியல் பகுதியில், 'மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது' என்ற தலைப்பில் கடந்தாண்டு இருந்த பாடத்துடன், 'பெண் உரிமை சார்ந்த திட்டங்கள்' என்ற புதிய பகுதியும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

இதில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட, பெண்களுக்கு சொத்தில் சம உரிமைச் சட்டம் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

பெண் உரிமை சட்டங்கள்: "இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், மேம்பாட்டிற்காகவும் பல்வேறு சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் தொடர்ந்து முயன்று வருகின்றன. இந்த இயக்கங்களின் பயனாக ஆண்களுக்கு இணையாக பெண்களையும் சட்ட ரீதியாக அங்கீகரிக்கும் வகையில் பல சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. பெண்களுக்கு சட்டரீதியான ஓர் உரிமை மறுக்கப்படும்போது, அதற்குத் தீர்வு வேண்டி அவர்களால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இயலும். எனவே, பெண்ணுரிமையில் சட்டமியற்றலின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்திய அளவில் இயற்றப்பட்டுள்ள பல்வேறு சட்டங்கள் பெண்களுக்கான உரிமைகளையும், பாதுகாப்பையும் வழங்கி வருகின்றன. சதி ஒழிப்புச்சட்டம் 1829-இன் படி, கணவன் இறந்த பிறகு மனைவியை உடன்கட்டை ஏற்றும் வழக்கமும், குழந்தை திருமண தடுப்புச் சட்டம் (சாரதா சட்டம்) 1929-இன் படி, பெண் பிள்ளைகளை இளம் வயதில் திருமணம் செய்துவைக்கும் வழக்கமும் சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டன. விதவை மறுமணச் சட்டம் 1856-இன் படி, கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்து கொள்ள சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டனர்.

1958இல் இயற்றப்பட்ட இந்து வாரிசு உரிமைச் சட்டமானது, பெற்றோர்களின் சொத்தில் மகளுக்குச் சொத்துரிமையை உறுதி செய்தது. எனினும், இச்சட்டம் இயற்றப்பட்டபோது கூட்டுக் குடும்பச் சொத்தில் பெண் வாரிசுகளுக்கான உரிமை உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையானது வரதட்சணை என்னும் கொடிய வழக்கம் நீடிப்பதற்கும் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதற்கும் காரணமாக அமைந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு, கூட்டுக் குடும்ப சொத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்குவதற்காக, 1956-இந்து வாரிசு உரிமைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்ட முன்வரைவு 1989-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்திருத்தமானது இந்து வாரிசு உரிமை (தமிழ்நாடு சட்டத் திருத்தம்) சட்டம் 1989 என்று அழைக்கப்படுகிறது. இந்த சட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் இந்து கூட்டுக் குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்துவதிலும் தமிழ்நாடு முனைப்புடன் செயல்படுகிறது என்பதற்கு 1989இல் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களால் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தம் ஓர் உதாரணமாக அமைந்துள்ளது” என்று அந்த பாடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மதிய உணவுத் திட்டம், கை ரிக்க்ஷா ஒழிப்பு திட்டம் , சுயமரியாதை திருமண சட்டம், சத்துணவுத் திட்டம் , கண்ணொளி காப்போம் திட்டம், விலையில்லா மிதிவண்டி திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து இணையத்தில் செய்திகளைத் தொகுத்து வகுப்பறையில் கலந்துரையாட வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தென்தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை: கலெக்டர்களுக்கு பறந்த ஆர்டர்! - TN HEAVY RAIN WARNING

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.