ETV Bharat / state

"தமிழகத்தில் எந்த கட்சிக்கும் ரோஷம் கிடையாதா?" - பாஜக பிரமுகர் காட்டமான கேள்வி - Sam Pitroda Speech Issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 11:22 AM IST

Sam Pitroda Controversy Speech Issue: தென்னிந்தியர்களை ஆப்பிரிக்கர்களோடு ஒப்பிட்டு பேசிய சாம் பிட்ரோடாவை கண்டித்து நடைப்பெற ஆர்ப்பாட்டத்தை போலீசார் தடுத்துவிட்டதாகவும், தமிழ்நாட்டில் அண்ணாமலைக்கு மட்டும்தான் ரோஷம் வருமா.. வேறு எந்த கட்சிக்கும் ரோஷம் கிடையாதா எனவும் பாஜக மாநில துணை தலைவர் கரு நாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Karu Nagarajan protest and Sam Pitroda image
BJP Karu Nagarajan protest and Sam Pitroda image (ETV Bharat)

சாம் பிட்ரோடா விவகாரத்தில் பாஜக போராட்டம் (ETV Bharat)

சென்னை:ஆங்கில நாளிதழுக்கு ஒன்றுக்கு காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக இருந்த சாம் பிட்ரோடா அளித்த பேட்டி ஒன்றில், வட இந்திய மக்களை வெள்ளையர்களுடனும், மேற்கு இந்தியாவில் வாழ்பவர்களை அரேபியர்களுடனும், கிழக்கில் வாழ்பவர்களை சீனர்களுடனும், தென்னிந்தியாவில் வாழும் மக்களை ஆப்பிரிக்கர்களுடனும் ஒப்பிட்டு பேசிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இதனை கண்டிக்கும் விதமாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மாநில துணை தலைவர் கரு நாகராஜன் தலைமையில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்காததால், ஆர்ப்பாட்டத்திற்கு வந்த பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில துணைத்தலைவர் கரு நாகராஜன், "தமிழர்கள் தலைகுனியும் அளவிற்கு ஒரு கருத்தை சாம் பிட்ரோடா கூறியிருக்கிறார். தமிழ்நாட்டில் இருக்கும் எந்த கட்சிக்கும் ரோஷம் கிடையாதா? அண்ணாமலைக்கு மட்டும்தான் ரோஷம் வருமா என்று கேள்வி எழுப்பினார். காவல்துறையினர் ஆர்ப்பாட்ட இடத்திற்கு செல்ல விடாமல் தடுக்கின்றனர்.

இன்றைக்கு தடுக்க முடியும் தினசரி தடுக்க முடியாது. இது தேர்தல் காலம் என்று புரிந்து கொண்டு தான், காவல்துறை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அனைத்து இடங்களையும் ஆர்ப்பாட்டம் ரத்து செய்து ஒரு இடத்தில் நடத்த திட்டமிட்டோம். ஆனால், இப்போது தடுக்கின்றனர். இவ்விவகாரத்தில் நீதிமன்றத்தை நிச்சயம் நாடுவோம்" எனத் தெரிவித்தார்.

பின்னணி: நாடு முழுவதும் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கியது. தற்போது நேற்று (மே 13) வரை சுமார் 4 கட்டங்கள் நிறைவடைந்துள்ளது. இந்த தேர்தலுக்கிடையே அரசியல் பிரமுகர்கள் செய்யும் சில செயல்கள் மற்றும் பேச்சுக்கள் விவாதத்தையும், சர்ச்சையையும் கிளப்பி வருகிறது. அந்த வகையில், சாம் பிட்ரோடா பேசியது தற்போது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

அதாவது, காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவராக இருந்தவர் சாம் பிட்ரோடா. கடந்த சில நாட்களுக்கு முன்பு சாம் பிட்ரோடா தனியார் ஊடகம் ஒன்றில் பேசிய போது, "இந்தியா பல்முகத்தன்மை கொண்ட ஜனநாயக நாடு என்பதற்கு சிறந்து உதாரணம். ஏனெனில், இந்தியாவில் தென்கிழக்கு பகுதியில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களை போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்கள் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பொருட்டல்ல, தற்போதும் நாங்கள் அனைவரும் சகோதர சகோதரிகளாக உள்ளோம்" என்று தெரிவித்திருந்தார்.

தேர்தல் நேரத்தில் இதுபோன்று பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், இதுதொடர்பாக ஆந்திரா மாநிலம் மற்றும் தெலுங்கானாவில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, சாம் பிட்ரோடாவின் கருத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். இதனை காங்கிரஸ் கட்சியினர் ஏற்கிறார்களா? எனவும் கேள்வி எழுப்பினார். இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியாக அமைந்தது.

அதைத் தொடர்ந்து, சாம் பிட்ரோடாவும் காங்கிரஸ் கட்சியின் அயலக அணி தலைவர் பொறுப்பில் இருந்து தான் விலகிக்கொள்வதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் அனுப்பினார். பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் வந்த நிலையில், சாம் பிட்ரோடாவின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "கோவை மத்திய சிறை தான் உனக்கு சமாதி" என சிறைக் காவலர் மிரட்டல்? - சவுக்கு சங்கர் பகீர் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.