ETV Bharat / state

பள்ளி பேருந்தில் இருக்கைகளுக்கு அதிகமாக மாணவர்களை ஏற்றினால் நடவடிக்கை - கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.. - private school bus inspection

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 4:01 PM IST

Private school bus inspection: தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் தணிக்கை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை ஆட்சியர் புகைப்படம்
பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை ஆட்சியர் புகைப்படம் (credits-ETV Bharat Tamil Nadu)

கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு வீடியோ (credits-ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதம் பள்ளிகளைத் திறப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி வாகனங்கள் தணிக்கை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோவையில் பி.ஆர்.எஸ் மைதானத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் இன்று தணிக்கை செய்யப்படுகின்றன. வேக கட்டுப்பாட்டுக் கருவிகள், முதலுதவி பெட்டிகள், இருக்கைகள் வசதிகள், அனைத்தும் சோதனை செய்யப்படுகிறது.இவற்றை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் தீயணைப்புத் துறையின் சார்பில் தீ விபத்தை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு பின்னர் தனியார் கண் மருத்துவமனை சார்பில் ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாவட்ட ஆட்சித்தலைவர், ”போக்குவரத்துத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,இன்றைய தினம் கோவை மாநகருக்கு உட்பட்ட 203 பள்ளிகளைச் சேர்ந்த 1323 வாகனங்கள் தணிக்கை செய்ய வந்துள்ளதாகவும் இந்த பேருந்துகளில் குறைபாடுகள் தென்பட்டால் அது சரி செய்யப்பட்ட பின்பே தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும் கூறினார்.

மேலும், இங்கு வந்துள்ள அனைத்து ஓட்டுநர்களுக்கும் இலவசமாகக் கண் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் ஓட்டுநர்களுக்குத் தீ தடுப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார். மேலும் இந்த தணிக்கைக்கு அனைத்து பள்ளிகளும் அவர்களது வாகனங்களை எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தினார். ஒவ்வொரு வாகனத்திற்கும் இருக்கை எண்ணிக்கைக்குத் தகுந்தார் போலவே பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்ல வேண்டும் எனவும் அதனை மீறக்கூடாது எனவும் அறிவுறுத்திய மாவட்ட ஆட்சியர் அவற்றை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

பல்வேறு தனியார் பள்ளிகளில் பள்ளி வாகனங்கள் இல்லாமல் தனியார் வாகனங்களில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் செல்வது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் அதனைப் பள்ளி நிர்வாகம் கண்காணிக்க வேண்டும் எனவும் அதை மீறி பெற்றோர்கள் சொந்த விருப்பத்தில் தனியார் வாகனத்தில் அனுப்பினால் வாகனத்தில் உள்ள இருக்கையின் எண்ணிக்கைக்குத் தகுந்தார் போல் அனுப்ப வேண்டும் எனவும் அதனை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:பத்தாம் வகுப்பு தேர்வில் சாதித்த நெல்லை மாற்றுத்திறனாளி மாணவர்! - TN 10th Results

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.