ETV Bharat / state

சென்னை துறைமுகம் வந்தடைந்த ஐஎன்எஸ் போர்க்கப்பல்!

author img

By ANI

Published : Feb 17, 2024, 8:22 AM IST

Updated : Feb 17, 2024, 9:52 AM IST

INS warship Reaches Chennai: சோமாலியா கடற்பகுதியில் இந்திய மாலுமிகளுடன் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை பத்திரமாக மீட்ட ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல், நேற்று பத்திரமாக சென்னை வந்தடைந்தது.

INS warship arrived at Chennai port
சென்னை துறைமுகம் வந்தடைந்த ஐஎன்எஸ் போர்க்கப்பல்

சென்னை துறைமுகம் வந்தடைந்த ஐஎன்எஸ் போர்க்கப்பல்

சென்னை: சோமாலியா கடற்பகுதியில் 15 இந்தியர்கள் உள்பட 21 மாலுமிகளுடன் கடத்தப்பட்ட சரக்கு கப்பலை பத்திரமாக மீட்ட ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல் (Indian Naval Warship INS Chennai), நேற்று (பிப்.16) பத்திரமாக சென்னை வந்தடைந்தது. அரபிக் கடல் மற்றும் செங்கடல் பகுதிகளில் செல்லும் சரக்கு கப்பல்கள் கடத்தப்படுவதும், டிரோன்கள் மூலம் தாக்கப்படுவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் சோமாலியா கடற்பகுதியில் இந்திய மாலுமிகளுடன் சென்ற லைபீரியா நாட்டைச் சேர்ந்த எம்வி லிலா நார்ஃப்லோக் (MV Lila Norfolk) என்ற சரக்கு கப்பல், ஆயுதம் ஏந்திய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டது. இதையடுத்து, கடத்தப்பட்ட கப்பலை இந்தியக் கடற்படையைச் சேர்ந்த விமானம் உன்னிப்பாக கவனித்து வந்தது.

இந்நிலையில், கடத்தப்பட்ட கப்பலில் 5 முதல் 6 ஆயுதம் ஏந்திய நபர்கள் ஏறியதாக கடல் வர்த்தக அமைப்பான UKMTO தெரிவித்ததை அடுத்து, கப்பலில் உள்ளவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட இந்திய கடற்படை, ஐஎன்எஸ் சென்னை கப்பலை எம்வி லிலா நார்ஃப்லோக் கப்பலை நோக்கி அனுப்பி வைத்தது.

அதைத் தொடர்ந்து, இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ரோந்து விமானம், கடத்தப்பட்ட கப்பலின் மேல் பறந்தபடி, கப்பலில் உள்ள மாலுமிகளுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தியது. மேலும், கடத்தப்பட்ட சரக்கு கப்பலை பின்தொடர்ந்து சென்ற ஐஎன்எஸ் சென்னை போர்க்கப்பல், கடத்தப்பட்ட கப்பலில் இருந்து வெளியேறுமாறு ஹெலிகாப்டர்கள் மூலம் கடற்கொள்ளையர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

அதன் பின்னர், போர்க்கப்பலில் இருந்த கடற்படை கமாண்டோக்கள், ஹெலிகாப்டர் மூலம் சரக்கு கப்பலுக்குள் குதித்து கொள்ளையர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், கப்பலில் எங்கு தேடியும் கடற்கொள்ளையர்கள் சிக்கவில்லை. எனவே, இந்திய கடற்படை விடுத்த எச்சரிக்கையை அடுத்து, கடற்கொள்ளையர்கள் சரக்கு கப்பலை விட்டு தப்பித்திருக்கலாம் எனக் கூறப்பட்டது.

இதனிடையே, கப்பலுக்குள் மாட்டித் தவித்த மாலுமிகளை, கமாண்டோக்கள் பத்திரமாக மீட்டு, மீண்டும் சரக்கு கப்பல் தனது பயணத்தைத் தொடங்க வேண்டிய உதவிகளை ஐஎன்எஸ் போர்க்கப்பல் அளித்து வந்தது. இந்நிலையில், 15 இந்தியர்கள் உள்பட 21 மாலுமிகளை மீட்கும் பணியில் களமிறங்கிய ஐஎன்எஸ் போர்க்கப்பல், தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்த நிலையில், நேற்று சென்னை துறைமுகம் வந்து சேர்ந்தது.

இதையும் படிங்க: டெல்லி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு: ரூ.50 கோடிக்கு விலை பேசியதா பாஜக? முதலமைச்சரின் புகார் என்ன?

Last Updated :Feb 17, 2024, 9:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.