ETV Bharat / state

மனைவிக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய கணவரின் நெகிழ்ச்சி செயல்! - Husband Builds Temple For Wife

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 8, 2024, 9:19 PM IST

Husband Builds Temple For Wife: அரியலூரில் மறைந்த மனைவியின் நினைவிடத்தில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய கணவரின் செயல் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Husband Builds Temple For Wife:
இறந்த மனைவிக்காக கணவர் கட்டிய கோயில் மற்றும் கணவர் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

அரியலூர்: ஜெயங்கொண்டம் அடுத்த தேவாமங்கலம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (42). இவர் திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி கற்பகவல்லி (36). திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், பத்தாண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த இவர்களுக்கு தற்போது கோமகன் (5) என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில், கற்பகவல்லிக்கு சிறுநீரகம் செயலிழந்தது தெரிய வந்துள்ளது. இதனால் பல லட்சம் ரூபாய் செலவு செய்து மனைவிக்கு, கோபாலகிருஷ்ணன் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி கற்பகவல்லி உயிரிழந்துள்ளார். மனைவி இறந்த துக்கத்தில் மீளா துயரத்தில் இருந்த கோபாலகிருஷ்ணன், தனது வீட்டின் அருகில் உள்ள சொந்த நிலத்திலேயே மனைவியை நல்லடக்கம் செய்துள்ளார்.

கற்பகவல்லியின் இறுதி நிமிடங்களில், கோபாலகிருஷ்ணன் ’நீ என் குல சாமி, உன்னை நாங்கள் மறக்க மாட்டோம். என்னால் உன்னைக் காப்பாற்ற முடியாவிட்டால் உனக்காக கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்துவேன். ஊரையே உன்னை சாமியாக கும்பிட வைப்பேன்’ என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஓராண்டு முடிவுற்ற நிலையில், கூறிய வார்த்தையை நிறைவேற்றும் வகையில், ஷாஜகான் தன் மனைவி மும்தாஜுக்காக தாஜ்மஹால் கட்டியது போல், கோபாலகிருஷ்ணன், கற்பகவல்லி அடக்கம் செய்யப்பட்ட 3 சென்ட் இடத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் கோயில் ஒன்றை கட்டியுள்ளார்.

அதில் 3 அடி உயரத்தில் கற்பகவல்லியை அம்மனாக பாவித்து உருவச் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் கோபாலகிருஷ்ணனின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். இது குறித்த தகவல் பரவியதும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் அங்கு திரண்டு, கோயிலில் வழிபாடு நடத்தினர்.

இதையும் படிங்க: "தோல் நிறத்தின் அடிப்படையில் அவமரியாதை செய்வதா.. பொறுத்துக் கொள்ள முடியாது" - சாம் பிட்ரோடா கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம்! - Sam Pitroda Racist Remarks

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.