ETV Bharat / state

அனுமதியின்றி ஃபிளக்ஸ் போர்டு வைத்த விவகாரம்: விசாரணை அதிகாரிக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு! - CHENNAI HIGH COURT MADURAI BENCH

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 13, 2024, 6:58 PM IST

High Court Madurai Bench: பரமக்குடியில் அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் பிளக்ஸ் போர்டு வைத்த விவகாரம் தொடர்பாக, விசாரணை அதிகாரி இறுதி அறிக்கையை 4 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

High Court Madurai Bench
உயர் நீதிமன்ற மதுரை கிளை புகைப்படம் (credits - ETV Bharat Tamil nadu)

மதுரை: அனுமதியின்றி பிளக்ஸ் போர்டு (Flex Board) வைத்ததாக பரமக்குடி போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய கோரி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த மனோஜ், அருண் குமார், புவனேஷ், ராஜா, வசந்த குமார் உள்ளிட்டோர் உயர் நீதி மன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது அரசு தரப்பில், “குற்றம் சாட்டப்பட்டவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல், பரமக்குடி விவசாயப் பண்ணைக்கு அருகில் பிளக்ஸ் போர்டு வைத்தனர். எனவே அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

அதனைத்தொடர்ந்து, மனுதாரர் தரப்பில், “ஃபிளக்ஸ் போர்டில் ஆட்சேபனைக்குரிய விளம்பரம் ஏதும் அமைக்கவில்லை. பலர் அனுமதி இல்லாமல் ஃபிளக்ஸ் போர்டு வைத்த நிலையில், எங்கள் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்” என்றனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி, “வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் நிலுவையில் உள்ளது. மனுதாரர்கள் எழுப்பிய காரணங்களை விசாரணையின்போது விசாரணை அதிகாரிகள் நன்கு பரிசீலிக்க முடியும். எஃப்ஐஆர் என்பது காவல்துறையின் பதிவேட்டில் புகாரைப் பதிவு செய்வதைத் தவிர வேறில்லை. விசாரணையின் நோக்கம் புகார் உண்மையானதா, இல்லையா? என்பதைக் கண்டறிவதாகும்.

விசாரணையை நியாயமான முறையில், வெளிப்படைத்தன்மையுடன் நடத்த வேண்டும். புகார்தாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சமர்ப்பிக்கும் சாட்சியங்களைக் கருத்தில் கொண்டு நியாயமான முறையில் விசாரணை நடத்த வேண்டும். நமது அரசாங்க முத்திரையில் உள்ள "வாய்மையே வெல்லும்" என்ற வாசகத்தை கருத்தில் கொண்டும் பணி செய்ய வேண்டும்.

வாய்மையே, உண்மையே வெற்றி பெறுகிறது. எனவே, இதை மனதில் கொண்டு செயல்படுவது ஒவ்வொரு அரசு ஊழியரின் பொறுப்பாகும் அரசு எதிர்பார்த்தபடி, அரசு ஊழியர்கள் தங்கள் கடமையை ஆற்றவும், உண்மை மட்டுமே வெற்றி பெறுவதையும் உறுதி செய்ய வேண்டும். மனுதாரர்கள் இந்த விண்ணப்பத்தில் எழுப்பியுள்ள கருத்துகளை பரிசீலித்து, விசாரணை நடத்தும் அதிகாரி இறுதி அறிக்கையை 4 மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: Lok Sabha Election 4th Phase: மேற்கு வங்கத்தில் 51.87% வாக்குப்பதிவு - Lok Sabha Election 4th Phase

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.