ETV Bharat / state

எந்த வகை பஞ்சு மிட்டாய்களுக்கு தடை? - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விளக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 17, 2024, 2:29 PM IST

Food Safety Department: தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில், சர்க்கரை பயன்படுத்தி தயாரித்து விற்கப்படும் வெள்ளை பஞ்சு மிட்டாய்களுக்கு தடையில்லை என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார்
உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ்குமார்

சென்னை: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வாயில் போட்ட உடனேயே கரைந்து விடும் மெல்லிய இழையிலான பஞ்சு மிட்டாயை விரும்புவர். சர்க்கரையும், நிறமியும் மட்டுமே உள்ள பஞ்சு மிட்டாயில், விஷத்தன்மை கொண்ட ரசாயனம் கலப்பு இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம் கொண்ட நிலையில், பஞ்சு மிட்டாய்களை சோதனை செய்து பார்த்துள்ளனர். அதில் ரோடமின் பி (RHODAMINE - B) என்ற விஷ நிறமி இருப்பது தெரிய வந்துள்ளது.

ஊதுவத்தி மற்றும் தீப்பெட்டியில் வண்ணத்திற்காக பூசப்படும் தொழிற்சாலை விஷ நிறமியை சாப்பிடுவதால், கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் என்பதையும் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்தது. பஞ்சுமிட்டாயை பிங்க் ,ரோஸ், மஞ்சள், பச்சை உள்ளிட்ட வண்ணங்களில் மாற்றுவதற்காக சேர்க்கப்பட்ட ரோடமைன் பி என்ற வேதிப் பொருளால் புற்றுநோய் உண்டாக்கும் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் ஆய்வில் ஈடுபட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களை ஆய்வு செய்தனர். இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் பஞ்சுமிட்டாய் பகுப்பாய்வு சோதனைக்காக அனுப்பிருந்ததாகவும், அந்த சோதனைகள் முடிவில் ரோடமைன் பாசிட்டி பி என்ற வேதிப்பொருள் கலக்கப்பட்டுள்ளது உறுதியானதாக தெரிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டிருந்த அறிக்கையில் வண்ணம் சேர்க்கபட்டு விற்பனை செய்யபடும் பஞ்சு மிட்டாய்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கபட்டுள்ளதாக உத்தரவை வெளியிட்டிருந்தார். இந்த உத்தரவு தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனையாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த தடை, பஞ்சு மிட்டாய் பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் குமாரிடம் ஈடிவி பாரத் செய்தியாளர் தொலைபேசி வாயிலாக பேசும் பொழுது, வண்ணம் சேர்க்கப்பட்டு தயாரித்து விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாய்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் சர்க்கரை பயன்படுத்தி தயாரித்து விற்கப்படும் வெள்ளை பஞ்சு மிட்டாய்களை விற்பனையாளர்கள் விற்பனை செய்யலாம் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், வண்ணம் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யும் பஞ்சு மிட்டாய்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு உணவு பாதுகாப்புத் துறை சார்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும், முடிந்த வரையில் குழந்தைகளின் பெற்றோரும் இது போன்ற உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு வாங்கித் தருவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை.. தமிழ்நாடு அரசு அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.