ETV Bharat / state

ஒசூர் அருகே காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; 15 நாட்களில் மூன்றாவது சம்பவம் - Elephant Attack in Hosur

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 3:54 PM IST

Elephant Attack in Hosur: ஒசூர் அருகே கடந்த 15 நாட்களில் யானை தாக்கி மூவர் உயிரிழந்த நிலையில், குடியிருப்பு பகுதிகளையொட்டிய வனப்பகுதிகளில் யானைகள் வராத வகையில் மின்வேலி அமைத்திட வேண்டும் என கிராம மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Deceased Thimmarayappa photo
உயிரிழந்த திம்மராயப்பா புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வனக்கோட்டம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய இரண்டு வட்டங்களுக்கு அருகே, அடர் வனப்பகுதிகளும், மிகப்பெரிய மூங்கில் காடுகளும் இருப்பதால் ஏராளமான வனவிலங்குகளுடன் 100க்கும் அதிகமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. யானைகள் உணவு தேடி இடம்பெயர்கிறபோது கூட்டத்திலிருந்து பிரியும் யானைகள் ஆக்ரோஷமாகவும், உணவு தேட முடியாமலும் இருக்கும் சமயங்களில் மனிதர்களை தாக்குகின்றன.

காட்டு யானைகள் கூட்டமாக இருப்பதைவிட, கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை யானையால் தான் மனித உயிரிழப்புக்கள் அதிகளவில் பதிவாகி உள்ளன. இந்த நிலையில் காட்டு யானை தாக்கி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வனக்கோட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட அலசட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மராயப்பா (வயது 42). விவசாயப் பணி செய்துவரும் இவர், ஊருக்கு அருகில் உள்ள விளைநிலத்திற்கு சென்றுவிட்டு நேற்றிரவு வீடு திரும்பியபோது, ஒற்றைக் காட்டு யானை தாக்கி அவரை தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த திம்மராயப்பா தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 15 நாட்களில் ஒசூர் வனக்கோட்டத்தில் மட்டும் காட்டு யானை தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2 ஆம் தேதி மேடுமுத்துக்கோட்டை கிராமத்தை சேர்ந்த அப்பைய்யாவும், 10ஆம் தேதி ஆலள்ளி கிராமத்தைச் சேர்ந்த இராஜேந்திரனும் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்கு சென்ற விவசாயிகள் யானை தாக்குதலுக்கு ஆளாகி உள்ள நிலையில், குடியிருப்புயொட்டிய வனப்பகுதிகளில் யானைகள் வராதபடி மின்வேலி அமைத்திட வேண்டும் என கிராம மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆயுதப்படை பெண் காவலர் மருத்துவமனையில் உயிரிழப்பு - மயிலாடுதுறையில் சோகம் - Woman Cop Death In TN

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.