ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி; திருச்சி பண்ணப்பட்டி ஒப்பந்ததாரருக்கு கிடைத்த நிலுவைத்தொகை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 7:28 PM IST

Updated : Mar 2, 2024, 6:58 AM IST

ETV Bharat Impact: திருச்சி பண்ணப்பட்டி ஊராட்சித் தலைவரின் கணவர் மலையாண்டி என்பவர், ஒப்பந்ததாரரிடம் கமிஷன் கேட்டு சம்பளத் தொகையை மறுத்திருந்த நிலையில், இது தொடர்பான செய்தியை ஈடிவி பாரத் செய்திகள் வெளியிட்டதன் மூலமாக, ஒப்பந்ததாரருக்கு மூன்றாம் மற்றும் நான்காம் தவணையாக ஒரு லட்சத்து 63 ஆயிரம் நிலுவைத் தொகை கிடைத்துள்ளது.

திருச்சி
திருச்சி

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி; திருச்சி பண்ணப்பட்டி ஒப்பந்ததாரருக்கு கிடைத்த நிலுவைத் தொகை!

திருச்சி: மணப்பாறை அடுத்த பன்னாங்கொம்பு நடுக்களம் பகுதியைச் சேர்ந்தவர், பழனியப்பன். பண்ணப்பட்டி ஊராட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் கிரேன் மற்றும் கூலி ஆட்களைப் பயன்படுத்தி, போர் குழாய்கள் ஏற்றி இறக்கும் வேலை செய்து வருகிறார். இவருக்கான சம்பள தொகையை ஊராட்சி நிர்வாகம் தவணை முறையில் வழங்கி வந்துள்ளது.

இந்நிலையில், மூன்றாம் மற்றும் நான்காம் தவணையாக ஒரு லட்சத்து 63 ஆயிரம் பெறுவதற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.15,000 வரை கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர் பழனியப்பன் தெரிவித்திருந்தார். இது குறித்து ஈடிவி பாரத் செய்திகளுக்கு அவர் கூறியதாவது, "நான் கடந்த 3 வருடமாக போர் குழாய்கள் ஏற்றி இறக்கும் வேலை செய்து வருகிறேன். சம்பள தொகையை ஊராட்சி நிர்வாகம் தனக்கு தவணை முறையில் வழங்கி வருகிறது.

தற்போது மூன்றாம் மற்றும் நான்காம் தவணையாக ஒரு லட்சத்து 63 ஆயிரம் பெறுவதற்கு ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மலையாண்டி என்பவரை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். தனக்கு ரூ.15,000 கமிஷன் கொடுத்தால், தவணைத் தொகையை பெற ஒப்புதல் அளிப்பேன் எனவும், பணத்தை வீட்டிற்கே வந்து பெற்றுக் கொள்வதாகவும் கூறினார். மேலும், கடந்த இரண்டு தவணைகளுக்கு ஊராட்சி செயலரிடம்தான் கமிஷன் கொடுத்தாய். அதனால் தற்போது தனக்கும் அந்த கமிஷன் தொகையை தர வேண்டும். அவர்களுக்கு எதுவும் கொடுக்க தேவையில்லை எனவும் கூறினார்.

அதற்கு தன்னிடம் தற்போது பணம் ஏதும் இல்லை. தனது 11 வயது மகனுக்கு சர்க்கரை நோய் இருப்பதால், அவரது மருத்துவச் செலவிற்கு பணம் செலவாகிவிட்டது. அதனால், எனது மனைவியின் நகையை அடமானம் வைத்துதான் தர வேண்டும் என கூறினேன்.

அதை ஏற்க மறுத்த தலைவரின் கணவர் மலையாண்டி, தனக்கும் நிறைய செலவினங்கள் உள்ளதாகவும், அதனால் காலம் தாழ்த்தாமல் பணத்தை விரைவாக தரும்படியும் கூறினார். பணத்தை கொடுக்க தவறும் பட்சத்தில், வீட்டிற்கு வருவதாகவும் கூறினார்.

இதையடுத்து இது குறித்து கடந்த பத்து நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளேன். எனவே, தயவுசெய்து எனக்கான ஒப்பந்த தொகையை விரைவில் கிடைக்கப் பெற முதலமைச்சர் வழிவகை செய்ய வேண்டும்.

அவ்வாறு கிடைக்கும் அந்த தொகையின் மூலம்தான், எனது மகனின் மருத்துவச் செலவை நான் மேற்கொள்ள முடியும். பணம் கிடைக்காத பட்சத்தில், நான் கடிதம் எழுதி வைத்துவிட்டு, குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதைத் தவிர, எனக்கு வேறு வழி தெரியவில்லை” என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து பண்ணப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மலையாண்டியை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினோம். அப்போது அவரிடம், ஒப்பந்ததாரர் பழனிப்பனிடம் கமிஷன் தொகை கேட்டது தொடர்பாக கேள்வி எழுப்பபட்டது. அதற்கு, தான் இதுவரை அவரிடம் இருந்து பணம் எதுவும் பெறவில்லை என்றார். நீங்கள் அவரிடம் பணம் கேட்ட ஆடியோ எங்களிடம் உள்ளது என்று கேட்டபோது, அதற்கு விளக்கமளிக்க மறுத்து விட்டார்.

மேலும், இது தொடர்பான செய்தியை ஆடியோவுடன் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி ஈடிவி பாரத் செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், இதன் எதிரொலியாக, ஒப்பந்ததாரர் பழனியப்பனுக்கு அவரது நிலுவைத் தொகையை பஞ்சாயத்து நிர்வாகம் முழுமையாக வழங்கிவிட்டது.

இதையடுத்து, “அந்த தொகை தனது மகனின் மருத்துவச் செலவிற்கு பெரிதும் உதவியாக இருந்தது. இதனை பெற்றுத் தர உதவியாக இருந்த ஈடிவி பாரத் நிறுவனத்திற்கு தனது நன்றியை” தெரிவித்துள்ளார். மேலும், ஆடியோ விவகாரம் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மணப்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தேனி விவசாயி மீது துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கு; இரண்டு வனத்துறை அதிகாரிகள் கைது!

Last Updated :Mar 2, 2024, 6:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.