ETV Bharat / state

திமுக கூட்டணியில் விசிக-2, மதிமுக-1 முடிவுக்கு வந்த தொகுதி பங்கீடு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 8, 2024, 1:45 PM IST

Updated : Mar 8, 2024, 2:53 PM IST

Dmk alliance seat sharing: வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகள் இடையிலான தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தைகளில் முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் ஏற்கனவே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளன. அதே வேளையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படாமல் இருந்த நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் இழுபறி நிடித்து வந்தது.

இதனிடையே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று காலை தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை, அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் என உடன்பாடு எட்டப்பட்டது. இதில் விசிகவுக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகள் திமுக கூட்டணியில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல மூன்று கட்ட சுமுகமான பேச்சு வார்த்தைக்கு பிறகு நேற்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மதிமுகவிற்கும் ஒரு தொகுதி என முடிவு எட்டப்பட்டு கையெழுத்தானது. ஆனால் மதிமுகவுக்கு எந்த தொகுதி என அறிவிக்கப்படவில்லை.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என தற்போது வரை முடிவாகாத நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: எப்படி இருக்கிறார் சின்னப்பிள்ளை? சாதனை தமிழச்சியின் இன்றைய நிலை என்ன?

Last Updated :Mar 8, 2024, 2:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.