ETV Bharat / state

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர திட்டமிட்டுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு: இம்மாதம் விண்ணப்பிக்கக் கடைசி நாள்! - TN polytechnic admission

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 9, 2024, 10:43 PM IST

Polytechnic admission 2024: தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் பகுதிநேர பட்டயப் படிப்பிற்காக மே 24ஆம் தேதி வரையும், நேரடி இரண்டாம் ஆண்டில் சேருவதற்கு மே 20ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், ஆணையர் வீரராகவராவ் கோப்புப்படம்
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், ஆணையர் வீரராகவராவ் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் 492 இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், மீன்வள தொழில்நுட்பம், மெரைன் இன்ஜினியரிங் உள்ளிட்ட பட்டயப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அரசுக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் மூலம் நடத்தப்படுகிறது. அந்தவகையில், தமிழ்நாட்டில் உள்ள 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 19 ஆயிரம் இடங்களில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகின. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை மே 10ஆம் தேதி வெளியாகின.

இந்த நிலையில், தொழில்நுட்ப கல்வி ஆணையர் வீரராகவராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்திலுள்ள 54 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில், 2024-2025ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு, நேரடி இரண்டாம் ஆண்டு மற்றும் பகுதிநேரப் பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பிக்கவும், சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யவும் https://www.tnpoly.in இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள சேவை மையங்கள் (TNEA Facilitation Centre) இம்மையங்களின் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மையங்களின் பட்டியல் https://www.tnpoly.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், முதலாம் ஆண்டு மற்றும் பகுதிநேர பட்டயப்படிப்பிற்கு, இணையதளம் மூலமாக விண்ணப்பத்தினை மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். மேலும், நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப்படிப்பிற்கு, இணையதளம் மூலம் மே 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை பதிவு செய்யலாம்.

கல்வித் தகுதி: முதலாம் ஆண்டு சேர்க்கைக்காக (1st Year Diploma Course) பத்தாம்வகுப்பு (SSLC) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் . பட்டயப்படிப்பை 3 ஆண்டுகள் படிக்க வேண்டும். நேரடி இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்பில் சேர்வதற்கு (Lateral Entry) பன்னிரண்டாம் வகுப்பு (HSC) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 ஆண்டுகள் தொழில் பிரிவில் (10th passed and 2 years ITI passed in any branch of Engineering and Technology) பெற்றிருக்க வேண்டும். மேலும் பட்டயப்படிப்பில் இரண்டு ஆண்டுகள் படிக்க வேண்டும். மேலும், பகுதிநேர படிப்பில் சேர 10ஆம் வகுப்பு மற்றும் இரண்டு ஆண்டுகள் ITI அல்லது 10th மற்றும் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், முன்பதிவுக் கட்டணமான ரூ.150 விண்ணப்பதாரர் Debit Card, Credit Card அல்லது Net Banking செலுத்தலாம். SC, SCA, ST பிரிவினருக்குப் பதிவுக் கட்டணம் இல்லை. அனைத்து தகவல்கள், வழிகாட்டி மற்றும் தொலைப்பேசி எண்கள் ஆகிய விவரங்களை, மாணவர்கள் https://www.tnpoly.in என்ற இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: வாக்கு எண்ணும் மையங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சத்ய பிரதா சாகு ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.