ETV Bharat / state

காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி... பெண்களுக்கான திட்டங்கள் என்னென்ன? - lok sabha election 2024

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 4:29 PM IST

Congress Manifesto for women: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், ஏழைப் பெண்களுக்கு வருடம் ரூ.1 லட்சம், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளைக் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

congress manifesto for women
congress manifesto for women

சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்தவாறு சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இன்று வெளியிட்டனர்.

அதில், இளைஞர்கள், பெண்கள், முதியோர், விவசாயிகளை, மாற்றுத்திறனாளிகள் ஈர்க்கும் வகையில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதிலும், முக்கியமாகப் பெண்களைக் கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகளைக் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அவை,

  • மகாலட்சுமி திட்டத்தின் கீழ், ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
  • 2025 முதல் மத்திய அரசில் 50 சதவீத பணியிடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
  • நீதிபதிகள், அரசு செயலாளர்கள், உயர் நிலை போலீஸ் அதிகாரிகள், சட்ட அதிகாரிகள் போன்ற உயர் பதவிகளில் பெண்கள் நியமிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.
  • பாலின பாகுபாடு எதிராக உள்ள அனைத்து சட்டங்களும் ஆராயப்பட்டு, எதிராக இருப்பின் காங்கிரஸ் ஆட்சி அமையும் முதலாம் ஆண்டில் அவை நீக்கப்படும்.
  • பெண்களுக்கு வழங்கும் ஊதியங்களில் பாரபட்சம் காட்டப்படுவதைத் தடுக்க 'ஒரே வேலை ஒரே ஊதியம்' என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படும்.
  • மத்திய அரசால் பெண் சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் இரட்டிப்பாக்கப்படும்.
  • நகரங்களில் தங்கி பணிபுரியும் புலம் பெயர்ந்த பெண் தொழிலாளர்களுக்கு, பாதுகாப்பான தங்குமிடம், சுகாதாரமான கழிப்பறைகள் போன்ற வசதிகளை ஏற்படுத்த மாநில அரசுகளுக்கு நிதி வழங்கப்படும்.பொது இடங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இலவச நாப்கின் விற்பனை செய்யும் இயந்திரம் பொருத்தப்படும்.
  • 2025 சட்டமன்ற தேர்தலிலும், 2029ம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.
  • வேலை இடங்களில் பெண்களின் பங்களிப்பு 25 சதவீதமாக உள்ள நிலையில் அதை விரிவுபடுத்தச் சமமான ஊதியம், பணியிடங்களில் பாதுகாப்பான சூழல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறையைத் தடுப்பது, மகப்பேறு சலுகைகளை நீட்டித்தல், குழந்தை பராமரிப்பு போன்றவை உறுதிசெய்யப்படும்.
  • ஆண்களுக்கும்,பெண்களுக்கும் இடையிலான சமத்துவத்தை உறுதி செய்யும் வகையில், திருமணம், வாரிசுரிமை, தத்தெடுப்பு போன்ற சட்டங்களை ஆராய்ந்து சமத்துவத்தை உறுதிப்படுத்துவோம்.
  • மாநில அரசுகளுடன் இணைந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு சாவித்ரிபாய் புலே விடுதியுடன், நாட்டில் பணிபுரியும் பெண்களுக்காக விடுதிகளின் எண்ணிக்கையை மத்திய அரசு இரட்டிப்பாக்கும் என வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தல் 2024: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு - முக்கிய அம்சங்கள் என்ன? - LOK SABHA ELECTION 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.