ETV Bharat / state

கொலை முயற்சியில் ஈடுபட்ட தொழிலதிபருக்கு 3 ஆண்டுகள் சிறை.. சென்னையில் நடந்தது என்ன? - attempt murder case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 9:28 AM IST

Chennai City Courts: சென்னை அருகே முன்பகை காரணமாக, தன் நிறுவனத்தில் வேலை பார்த்த நபரை கொலை செய்ய முயன்ற வழக்கில், நிதி நிறுவன உரிமையாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

CHENNAI CITY COURTS
CHENNAI CITY COURTS

சென்னை: சென்னை நெற்குன்றம் முனியப்பா நகரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் 'வெற்றிவேல் முருகா' என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்த நிறுவனத்தில் கார்மேகம் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் மேலாளர் கார்மேகம், நிறுவன பணத்தை மோசடி செய்ததாக மாரிமுத்து குற்றம்சாட்டி வந்துள்ளார். இதுதொடர்பாக, இருவருக்கும் இடையே முன்பகை இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு வீட்டில் இருந்த கார்மேகத்தை, தினசரி பண வசூலுக்கு வருமாறு இருச்சக்கர வாகனத்தில் மாரிமுத்து அழைத்து சென்றுள்ளார்.

இருவரும் பண வசூலுக்காக கோயம்பேடு சந்தை அருகே சென்றபோது, இருசக்கர வாகனத்தை ஓட்டிய கார்மேகத்தை, மாரிமுத்து கத்தியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கார்மேகம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இச்சம்பவம் குறித்து, கார்மேகம் கொடுத்த புகாரின் பேரில், கோயம்பேடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து, மறுநாள் மாரிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, அல்லிக்குளத்தில் உள்ள மாவட்ட 23வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆர்.ராஜ்குமார் முன் நடந்தது.

காவல்துறை தரப்பில், மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பி.செந்தில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, மாரிமுத்து மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பு நிரூபித்துள்ளது. எனவே, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், இரண்டு ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: “எனது உரிமைதான் மேலானது.. மற்றபடி அமைதியானவர்”.. காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா தரப்பு வாதம்! - Ilayaraja Songs Copyright Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.