ETV Bharat / state

சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்திற்கு சீல்.. மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது - காரணம் என்ன? - savukku shankar

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 11, 2024, 8:35 AM IST

Updated : May 11, 2024, 12:09 PM IST

Savukku Shankar: சவுக்கு சங்கர் மீது பெண்களை அவதூறாகப் பேசியது உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்துள்ள நிலையில், அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்குச் சீல் வைத்த போலீசார், தற்போது மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சவுக்கு சங்கர் புகைப்படம்
சவுக்கு சங்கர் புகைப்படம் (Photos credit: ETV Bharat Tamil Nadu)

சென்னை: பெண் காவலர்கள் குறித்து யூடியுபர் சவுக்கு சங்கர் இழிவாக பேசியதாக வீடியோ வைரலாகிய நிலையில், சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரின் அடிப்படையில், மே 4ஆம் தேதி கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கரை தேனியில் வைத்து கைது செய்தனர்.

பின்னர், சவுக்கு சங்கர் காரிலிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி, அவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி காவல்நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி போலீசார் சவுக்கு சங்கர் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக அவரது ஓட்டுநர் பிரபு ராஜரத்தினம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பாக, சவுக்கு சங்கர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், பெண் பத்திரிக்கையாளர் சந்தியா ரவிசங்கர் மற்றும் தமிழர் முன்னேற்றப் படைத் தலைவர் வீரலட்சுமி ஆகியோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 2 வழக்குகள் பதிவு செய்திருந்தனர். அதுமட்டுமின்றி, சவுக்கு சங்கர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீசார் ஒரு வழக்கும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அவதூறு பரப்பியதாக பெருநகர சென்னை வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஏ) நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கும் பதியப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 'இனி யார் மனதையும் புண்படுத்தமாட்டேன்' - நீதிபதியிடம் வாக்குறுதி அளித்த சவுக்கு சங்கர்?

தொடர்ந்து, 3 வழக்குகளிலும் சவுக்கு சங்கரைக் கைது செய்த சென்னை குற்றப்பிரிவு போலீசார், அவரை எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். அப்போது, மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள் சிலர் சவுக்கு சங்கருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, அவர் சென்ற வாகனத்தைத் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, சென்னை மதுரவாயில் பகுதியில் உள்ள சவுக்கு சங்கர் இல்லம் மற்றும் தியாகராய நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி காவல்நிலைய ஆய்வாளர் பார்த்திபன் தலைமையிலான குழுவினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, சவுக்கு சங்கர் தங்கியிருந்த அறையில் கார் ஓட்டுநர் இருவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்படுவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.

சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த போலீசாரின் சோதனை நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்த சோதனையில் மதுரவாயிலில் உள்ள சவுக்கு சங்கர் வீட்டிலிருந்து ரூ.2 லட்சம் ரொக்கம், செல்போன், லேப்டாப், கஞ்சா அடங்கிய சிகரெட் உள்ளிட்டவை பறிமுதல் கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் தியாகராய நகர் பகுதியில் உள்ள அலுவலகத்திலிருந்து லேப்டாப்கள், ஹார்டிஸ்க் (Hard disk) உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்த போலீசார், சவுக்கு சங்கர் வீடு மற்றும் அலுவலகம் இரண்டிற்கும் சீல் வைத்து விட்டுச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சவுக்கு சங்கர் மீது பெண்களை அவதூறாக பேசியது, கஞ்சா பறிமுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்துள்ள நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான வழக்கில் சவுக்கு சங்கருக்கு 24ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்ற முதன்மை நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜாபர் சாதிக் முதல் சவுக்கு சங்கர் வரை.. இயக்குநர் அமீர் பிரத்யேக பதில்கள்!

Last Updated : May 11, 2024, 12:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.