ETV Bharat / state

வெப்ப அலையிலிருந்து கால்நடைகளை பாதுகாப்பது எப்படி? அறிவுரை வழங்கிய சென்னை ஆட்சியர்! - Protect cattle from summer heat

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 15, 2024, 4:18 PM IST

How to protect cattle from summer heat: வெப்ப அலையிலிருந்து கால்நடைகளை தகுந்த முறையில் பாதுகாக்க கால்நடை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே விளக்கியுள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் கால்நடைகள் கோப்புப்படம்
சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் கால்நடைகள் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கோடை வெப்ப அலையிலிருந்து கால்நடை உரிமையாளர்கள், தங்கள் கால்நடைகளை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே விளக்கியுள்ளார். மேலும், இது குறித்து அவர் செய்திக் குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், "சென்னையில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள சென்னை மாவட்டத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, கடுமையான வெப்ப அலை வீசுவதால், கால்நடைகளைப் பராமரித்திட சென்னை மாவட்ட ஆட்சியரகத்தின் சார்பில் பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது. கால்நடைகளுக்கு தேவையான சுத்தமான குடிநீரை, குடிநீர் தொட்டிகளில் நிரப்பி வைக்க வேண்டும்.

கால்நடைகளை திறந்தவெளியிலும், சாலைகளிலும் விடாமல் பாதுகாப்பான இடங்களிலும், கொட்டகைகளிலும் பராமரிக்க வேண்டும். கருவுற்றுள்ள மற்றும் பாலூட்டும் கால்நடைகள், இளங்கன்றுகள் ஆகியவற்றை நிழலான பகுதிகளில் பாதுகாப்பாக பராமரித்திட வேண்டும்.

கடுமையான வெப்பத்தினால் பாதிப்படைந்த கால்நடைகளை அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களுக்கு சென்று உரிய சிகிச்சை மேற்கொண்டும், அவைகளை பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும். ஆட்டுக்கொட்டகைகள், மாட்டுத் தொழுவங்கள் மற்றும் கோழிக் கொட்டகைகளை பகல் நேரங்களில் ஈரமான சாக்குப்பைகளை கொண்டு கட்டிவைக்க வேண்டும்.

கால்நடைகளுக்கு தேவையான உலர் தீவனம் மற்றும் புல் கரணைகளை இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். கால்நடை வளர்ப்போர் தங்களது செல்லப்பிராணிகளை திறந்த வெளியில் விடாமலும், தங்கள் வாகனங்களில் அவைகளை தனியே பூட்டி வைத்து செல்லாமல் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும்" என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களின் வருங்காலம் ஓட்டுநர்களிடமும் உள்ளது - ராணிப்பேட்டை ஆட்சியர் அறிவுரை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.