ETV Bharat / state

சென்னை ஏர்போர்ட்டில் குவிந்த தேமுதிகவினர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! - Case Registration Against DMDK

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 12, 2024, 10:56 PM IST

Updated : May 12, 2024, 11:01 PM IST

Case Registration Against DMDK: மறைந்த கேப்டன் விஜயகாந்த்துக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதினை பெற்றுக்கொண்டு, நேற்று(மே.11) சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரேமலதா விஜயகாந்த்தை வரவேற்க தேமுதிக தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்ததால், சென்னை விமானநிலைய போலீசார் 7 பிரிவுகளின் கீழ் இன்று(மே.12) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை ஏர்போர்ட்டில் குவிந்த தேமுதிகவினர்
சென்னை ஏர்போர்ட்டில் குவிந்த தேமுதிகவினர் (photo credit to ETV Bharat Tamil Nadu)

சென்னை: மறைந்த நடிகரும், தேமுதிக அரசியல் கட்சி நிறுவனருமான விஜயகாந்த்துக்கு பத்மபூஷன் விருது, டெல்லியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கினார். அந்த விருதை பெற்றுக்கொண்ட, பிரேமலதா விஜயகாந்த் நேற்று மதியம் (மே.11) விமானம் மூலம், சென்னை திரும்பினார்.

அப்போது சென்னை விமான நிலையத்தில், தேமுதிக கட்சியைச் சேர்ந்த ஏராளமானவர்கள் குவிந்து, பிரேமலதாவுக்கு வரவேற்பு அளித்ததோடு, சென்னை விமான நிலையத்திலிருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்குப் பேரணியாகவும் புறப்பட்டுச் சென்றனர்.

தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், தேர்தல் ஆணையம் அனுமதி இல்லாமல் பேரணி நடத்துவது, பெருமளவு கூட்டம் கூடுவது தவறு என்றும், சென்னை விமான நிலைய போலீசார், தேமுதிகவினர் இடம் எடுத்துரைத்தனர்.

அப்போது போலீசாருக்கும், தேமுதிகவினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. அந்த நேரத்தில் தேமுதிக தொண்டர் ஒருவர் விமான நிலைய வளாகத்திற்குள் நின்ற, கார் ஒன்றின் மேல் ஏறி, கொடிக்கம்பத்தால், காரின் மேல் பகுதியை அடித்துச் சேதப்படுத்தினார். இதனால், சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்து, சென்னை விமான நிலைய போலீசார் தேர்தல் ஆணையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து‌, தேர்தல் ஆணையம் சார்பில், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரியான தாசில்தார், சென்னை விமான நிலைய போலீசாரிடம், நேற்றிரவு தேமுதிகவினர் மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகப் புகார் செய்தார்.

அதன் பேரில் சென்னை விமான நிலைய போலீசார், தேமுதிக மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் சந்தோஷ் குமார் உட்பட தேமுதிகவினர் மீது, 143 சட்ட விரோதமாகக் கூடுதல், 147 கலகம் செய்யக் கூட்டத்தைக் கூட்டுதல், 341 தனி நபரை முறையற்ற விதத்தில் தடுப்பது, 353 அரசு ஊழியரைக் கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில், வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தை பொருத்தமட்டில், இதைப்போல் அரசியல் கட்சியினர் வரவேற்பு கொடுப்பதும், கூட்டம் கூடுவதும் வழக்கமாக நடக்கக் கூடியது தான். ஆனால் தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறை அமுலில் உள்ள நேரத்தில், தேர்தல் ஆணையம் அனுமதி இல்லாமல், இதைப்போல் பெரும் கூட்டத்தை, விமான நிலையத்திற்குள் கூட்டி, போக்குவரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தியதால், தேர்தல் ஆணையம் புகாரின் பெயரில், சென்னை விமான நிலைய போலீசார் வழக்குகள் பதிவு செய்துள்ளனர் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: இயற்கை விளைபொருள்களுக்கு நியாயமான விலை; மதுரையில் அசத்தும் இயற்கை சந்தை! - Madurai Natural Market Is Improved

Last Updated : May 12, 2024, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.