ETV Bharat / state

வேலூரில் வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்கள் மூன்று பேர் கைது! - Robbery Case In Vellore

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 19, 2024, 3:14 PM IST

Robbery Case In Vellore: வேலூர் மாவட்டம், பள்ளிக்கொண்டா மற்றும் வெள்ளக்கல் மேடு ஆகிய பகுதியில், வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்கள் புகைப்படம்
வழிப்பறியில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்கள் புகைப்படம் (credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட பாஜக இளைஞரணி தலைவராக இருப்பவர் கிளி என்கிற சதீஷ் (34) இவர் பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அரக்கோணம் பகுதியில் கொலை வழக்கு தொடர்பாக இவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம், அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது, சதீஷ் வழிமறித்து கத்தியைக் காட்டி, பணம் கேட்டு மிரட்டி ஆபாசமாகப் பேசி வழிப்பறியில் ஈடுபட்டதாகக் கூறி பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் சதீஷ் மீது விஜய் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் அடிப்படையில், பள்ளிகொண்டா போலீசார் சதீஷ் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளிகொண்டா பகுதியில் பாஜக பிரமுகர் வழிப்பறியில் ஈடுபட்டு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல், வேலூர் மாவட்டம், வெள்ளக்கல் மேடு அருகே காங்கேயநல்லூரைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி பணம் கேட்டு மிரட்டி உள்ளனர்.

உடனடியாக அருகிலிருந்தவர்கள் இருவரையும் பிடித்து வைத்து காட்பாடி காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். இத்தகவலறிந்து விரைந்து வந்த காட்பாடி காவல் நிலைய போலீசார் இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், இருவரும் விருதம்பட்டு டி.கே.புரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் நவீன்குமார் என்பது தெரிய வந்தது. இதில், ராஜேஷ் பாஜக தொழில்நுட்ப பிரிவில் மாவட்டச் செயலாளராக இருப்பதும், நவீன்குமார் பாஜகவின் இளைஞர் அணி மாவட்ட பொறுப்பாளராக இருப்பதும் தெரிய வந்தது. பட்டப்பகலில் கத்தியைக் காட்டி மிரட்டிய பாஜக பிரமுகர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஆருத்ரா நிதி நிறுவனம் இயக்குனர் ரூசோ கைது - Aarudhra Scam Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.