ETV Bharat / state

ஸ்லீப்பர் செல் யார்? சீமானுக்கு அண்ணாமலையின் கேள்வி! - Annamalai vs seeman

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 5:27 PM IST

Annamalai
அண்ணாமலை

k. Annamalai: கச்சத்தீவு தொடர்பான ஆவணத்தை ஆர்டிஐயில் அதிகாரப்பூர்வமாக நான் கொடுத்து வாங்கியுள்ளேன். இதனை பச்சைப் பொய் என்று சொல்பவர்கள் என்னுடன் விவாதம் செய்ய தயாரா என்று கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை

கோயம்புத்தூர்: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, ஆனைகட்டி, தடாகம் உள்ளிட்ட பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் பொழுது தடாகம் பகுதியில் கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “கச்சத்தீவு தொடர்பாக சில நபர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியத்தை தற்போது வெளியில் கொண்டு வந்துள்ளோம். கச்சத்தீவு ஒப்பந்தம் பற்றி இந்திராகாந்தி, கலைஞர் கருணாநிதி மற்றும் அமைச்சர் ஒருவர் ஆகிய மூவருக்கு மட்டுமே தெரியும்.

கச்சத்தீவு கிடைத்தால் தான் தமிழக மீனவர்களின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். கச்சத்தீவை கொடுத்ததற்காக இலங்கையிடம் இருந்து இந்தியாவிற்கு ஏதும் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தை அறிவியல் பூர்வமாகவும், சட்ட பூர்வமாகவும் பாஜக அணுகி வருகிறது. கச்சத்தீவு வேண்டும் என்பதே எங்களின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு.

இந்நிலையில், எல்லா விதமான தீர்வுகளுக்கும் முயற்சி எடுப்போம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விவகாரத்தில் இறங்கியுள்ளார். எனவே, இந்த விவகாரத்தில் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம். அதற்காக ஒவ்வொரு பணிகளையும் செய்துகொண்டிருக்கிறோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், பாஜகவுடன் கூட்டணி வைத்தால் டெபாசிட் கிடைக்காது என்றும், அண்ணாமலை என் சிலிப்பர் செல் என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “ சீமான் அண்ணனுக்கு சின்னமும் இல்லை ஓட்டும் இல்லை. தற்போது அண்ணாமலை மீது சீமான் அண்ணன் உட்கார்ந்து விட்டார்.

அண்ணாமலை சீமானின் சிலிப்பர் செல்லா? இல்லை சீமான் அண்ணா அண்ணமலையின் சிலிப்பர் செல்லா? என்று கேள்வி எழுப்பினார். இளைஞர்கள் மற்றும் பெண்கள் எந்த பக்கம் உள்ளார்கள் என்று சீமான் அண்ணனுக்கு தெரியும். இன்று களத்தில் பாஜக தனித்து நிற்கிறது. எனவே, அவர் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்று தெரிவித்தார்.

மேலும், கச்சத்தீவு தொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் கூறியது குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “ 50 ஆண்டுகளுக்குப் பிறகு கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக நாங்கள் வெளியில் கொண்டுவந்துள்ளோம். இத்தனை ஆண்டுகளாக இது குறித்து பேசிய சுப்பிரமணியன் சாமி போன்றவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள். 1968 -ல் இந்திராகாந்தியும், செனநாயக்காவும் என்ன பேசினார்கள் என்பது குறித்தும் ஆர்டிஐயிடம் கேட்டுள்ளோம்.

கடந்த ஐந்தாண்டுகளாக சுப்பிரமணியன் சாமி என்ன பொறுப்பில் இருக்கிறார்? அவர் எங்கள் கட்சித் தலைவர் கிடையாது. விரக்தியில், பொறுப்பு இல்லை என இருக்கிறார். பிரதமர் மோடியை திட்டிக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு சுப்பிரமணியன் சாமி யார் என்பது தெரியும். பெரியவர்கள் தவறு செய்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் செல்வதுதான் நலம் என நான் நினைக்கிறேன்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், அந்தியோதயா யோஜனா திட்டத்தின் கீழ் நாம் கொடுக்கும் 35 கிலோ அரிசியின் மதிப்பினை நாம் குறைக்கவில்லை. காவிரியில் தண்ணீர் குறைந்துள்ளது. இந்தியா கூட்டணி செய்த காமெடியால் மகசூல் குறைந்து இருக்கிறது. அப்படி இருந்தாலும் மத்திய அரசு அதனை சரி செய்யும்.

இது ஜனநாயக நாடு. யாரையும் குடிக்க கூடாது என நாம் கூற முடியாது. கல்லு கடை திறக்க வேண்டும் என 317 பக்க வெள்ளை அறிக்கை ஆளுநரிடம் கொடுத்துள்ளோம்.கள்ளுக்கடைகளை திறப்போம் என்பதில் உறக்கமாக சொல்வோம். மக்களை குடிக்காதீர்கள் என சொல்லப்போவதில்லை. டாஸ்மாக்கை மூட வேண்டும் கல்லு கடைகளை திறக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். ஜனநாயக நாட்டில் மக்கள் கை, கால்களை கட்டி குடிக்காதீர்கள் என எப்படி கூற முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

ஆர்டிஐயில் அதிகாரப்பூர்வமாக நான் கொடுத்து வாங்கியுள்ளேன். இதனை பச்சை பொய் என்பவர்களை என்னுடன் விவாதம் செய்ய வரச்சொல்லுங்கள். எப்படி இந்த ஆவணத்தை நாங்களே உருவாக்கினோம். உண்மையான ஆவணத்தை எந்த அதிகாரி கையெழுத்திட்டார் என்பதை உங்களிடம் காட்டியுள்ளோம்.
திமுகவின் பதில் வேடிக்கையாக இருக்கிறது. கலைஞர் கருணாநிதி பேசவே இல்லை என்று யாரும் கூறவில்லை. ஆவணங்கள் யார் கொடுத்தார்கள் என்று தான் கேட்கிறார்கள். இதிலிருந்தே தெரிகிறது திமுகவின் பச்சை பொய்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் - திமுகவின் சதியை அம்பலப்படுத்தியுள்ளோம்: அமைச்சர் எல்.முருகன் பிரேத்யேக பேட்டி! - L Murugan

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.