ETV Bharat / state

கூட்டுறவு நிறுவனங்களில் ரூ.5 லட்சம் வரை கல்விக்கடன்: தமிழக அரசு அறிவிப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 11, 2024, 11:06 PM IST

கூட்டுறவு நிறுவனங்களில் மாணவர்களுக்கு ஐந்து லட்சம் வரை கல்வி கடன் வழங்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை : கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுப்பையன், கூட்டுறவு நிறுவனங்களுக்கு கல்விக்கடன் வழங்குவது குறித்து அனுப்பி உள்ள கடிதத்தில், "தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, மத்தியக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் நகரக் கூட்டுறவு வங்கிகள் மூலம் ஒரு லட்சம் வரை கல்விக் கடன் வழங்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

தனிமனித வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் கல்வியின் பங்கு மிக முக்கியமானது என்பதாலும், தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையிலும், மாணவர்களின் நலன் கருதி தற்போது கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கல்விக் கடன் உச்சவரம்பினை ரூ.5 லட்சம் வரை உயர்த்தி வழங்க நிபந்தனைகள் வழிமுறைகளுக்குட்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி,மத்தியக் கூட்டுறவு வங்கிகள்,நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு கடன் சங்கங்கள்,தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் ஆகியவற்றில் கடன் வழங்கலாம். கடன் வரம்பாக (Loan limit) ரூபாய் ஒரு இலட்சம் வரை பிணையமின்றி கடன் வழங்கலாம்.

மேலும், ஒரு லட்சத்து 1 ரூபாய் முதல் 5,00,000 வரை 100% பிணையம் பெறப்பட வேண்டும். படிப்பிற்குண்டான டியூஷன் கட்டணம், தங்கும் விடுதி கட்டணம் மற்றும் உணவு கட்டணம், ஆய்வகம் (laboratory) கட்டணம், புத்தக கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை சேர்த்து கடன் வழங்கப்படும்.

வட்டி விகிதம் (Interest rate): கடனுக்கான வட்டி விகிதத்தினை அந்தந்த வங்கியில் உள்ள சொத்து பொறுப்புக் குழு மூலம் நிர்ணயம் செய்யப்படும். இணைப்புச் சங்கங்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை நிதியுதவி வழங்கும் வங்கி நிர்ணயம் செய்ய வேண்டும்.

மேலும், இணைப்புக் சங்கங்கள் (நகர கூட்டுறவு வங்கிகள் தவிர) இணைக்கப்பட்ட மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலிருந்து கடன் பெற்று உறுப்பினர்களுக்கு இக்கடனை வழங்க வேண்டும்.

கடனை திருப்பி செலுத்தும் காலம் (Loan repayment period): கல்வி பயிலும் காலம் முடிந்து 6 மாதங்கள் கழித்து வரும் 5 வருடங்களுக்குள் கடனை முழுமையாக வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும்.

மாணவர் தகுதி (Student eligibility): இந்திய குடிமகனாகவும், 30 வயதுக்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.

தகுதி பெறும் படிப்புகள் (Eligible courses) : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் வழங்ப்படும் பட்டயப் படிப்பு ( Diploma courses)
தொழில்முறை படிப்புகள் உள்ளிட்ட இளங்கலை பட்டப்படிப்புகள் (UG Degrees including Professional courses) முதுகலைப் பட்டப் படிப்பு மாணவரின் பெற்றோர்(கள்) கட்டாயமாக இணை விண்ணப்பதாரராக (Co-applicant) சேர வேண்டும்.

திருமணமான மாணவர் என்றால் அவரின் கணவர் (parent in-law) இணை விண்ணப்பதாரராக (Co-applicant) இருக்கலாம். ஒரு படிப்பின் அடுத்த ஆண்டுகளில் (subsequent years of the course) மாணவர்கள் கல்விக் கடனுக்கு வங்கி, சங்கத்தை அணுகினால், அம்மாணவர் வேறு எந்த வங்கியிலிருந்தும், நிதி நிறுவனத்திலிருந்தும் (Financial Institution) ஆரம்ப ஆண்டுகளில் (initial years) கடன் பெறவில்லை என்பதை உறுதி செய்து தகுதியுடைய மாணவர்களுக்கு கடன் வழங்க பரிசீலிக்கலாம்.

இந்நேர்விலும், கல்வி பயிலும் காலம் முடிந்து 6 மாதங்கள் கழித்து வரும் 5 வருடங்களுக்குள் கடனை முழுமையாக வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும். விதிமுறைகளுக்குட்பட்டு பெறவேண்டிய ஆவணங்களைப் பெற்று கடன் பரிசீலிக்கப்பட வேண்டும். டாம்கோ. டாப்செட்கோ, தாட்கோ மூலம் வழங்கப்படும் கல்விக் கடனுக்கு மேற்குறிப்பிடப்பட்ட நிபந்தனைகள் பொருந்தும்.

இந்நேர்வில், இக்கடனுக்கான வட்டி விகிதம், நிறுவனம் (டாம்கோ, டாப்செட்கோ. தாட்கோ) வழங்கும் வட்டி விகிதத்தில் வழங்க வேண்டும். கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தப்படாதபட்சத்தில், கடனை வசூலிக்க இதர கடன்களுக்கு பின்பற்றப்படும் சட்டபூர்வ வழிமுறைகள் இக்கடனுக்கும் பொருந்தும்.

இச்சுற்றறிக்கையின் வழி ஆணையிடப்பட்ட கல்விக்கடன் வழங்க ஏதுவாக வங்கியின்/சங்கத்தின் துணைவிதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க : "ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவது கண்டனத்திற்குரியது" - அமைச்சர் சிவசங்கர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.