ETV Bharat / state

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தனித் தீர்மானம் - அண்ணாமலை ரியாக்‌ஷன் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 3:52 PM IST

Updated : Feb 14, 2024, 5:24 PM IST

Annamalai: 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தயாராக உள்ளதாகவும், விரைவில் கூட்டணி குறித்து அறிவிப்பதாகவும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைக் கொண்டு எம்பிக்கள், எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியுமென அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு

கோவை: கோவையில் கடந்த 1998ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு, இன்று (பிப்.14) பாஜக சார்பில் அஞ்சலி கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், “மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மீண்டும் ராஜ்ய சபா உறுப்பினராக போட்டியிடுகிறார் என பாஜக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது எங்களுக்கு சந்தோஷத்தை அளித்துள்ளது. மத்தியப் பிரதேசம், தமிழகம் என அவரது பணி சிறக்கட்டும். அவரது வேலை இன்னும் மக்களுக்குச் சென்று சேரட்டும். இன்று சட்டமன்றத்தில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம். நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை பலமுறை உயர்த்தப்பட்டது. 1952 முதல் 1967 வரை ஒரே நேரத்தில் சட்டமன்றம், நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதுவரை, 91 முறை மாநில ஆட்சிகள் கலைக்கப்பட்டன. அதில், 50 முறை இந்திரா காந்தி ஆட்சியைக் கலைத்ததால் தேர்தல் நடத்தும் நேரம் மாறியது.

கருணாநிதி வரவேற்ற திட்டம்: ஒரே நாடு, ஒரே தேர்தலை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, 'நெஞ்சுக்கு நீதி' புத்தகத்தில் வரவேற்று எழுதியுள்ளார். மு.க.ஸ்டாலின் தனது தந்தையின் புத்தகத்தைப் படிக்கவில்லையா? இப்போது இல்லையென்றாலும், ஒரே நாடு ஒரே தேர்தல் எதிர்காலத்தில் வரும். 2024-இல் ஒரே நாடு ஒரே தேர்தல் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு.

அத்தேர்தல், 2026-இல் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகமாக வேண்டும். ஒரு எம்பி, 20 லட்சம் பேருக்கு சேவை செய்ய முடியாது. ஒரு எம்‌எல்ஏ, 5 லட்சம் பேரை பார்க்க முடியாது.

33 சதவீதம் இட ஒதுக்கீடு: இதனால் அரசு இயந்திரம் ஸ்தம்பித்து உள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில்தான் 33 சதவீதம் இட ஒதுக்கீடு அமல்படுத்த முடியும். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். எடுத்தோம் கவிழ்த்தோம் என பத்து வரி எழுதி வந்து முதலமைச்சர் ஆதரவு, எதிர்ப்பு கேட்பது என்பது யோசனை இல்லாமல் கொண்டு வந்துள்ளார். மக்கள்தொகை மட்டுமே ஒரு கணக்கீடாக இருக்கக்கூடாது.

யாருக்கும் பாதகம் இல்லாமல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. யாருக்கும் பிரச்னை இல்லாமல் பிரதமர் மோடி அதனைக் கொண்டு வருவார். நீலகிரியில் போட்டியிட தாங்கள் சொல்லவில்லை. நீலகிரி தொகுதியை தயார்ப்படுத்தித் தர அவரிடம் சொல்லி இருந்தோம். நீலகிரியில் வேட்பாளர் தயாராக உள்ளார். எல்லா தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தயாராக இருக்கின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து சரியான நேரத்தில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில்

  1. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்பது மிக மோசமான எதேச்சாதிகார எண்ணமாகும். இதனை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும்.
  2. 'மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு' என்ற பெயரால் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க நினைக்கும் சதி, இதனை முறியடித்தாக வேண்டும் எனப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசின் இரண்டு தீர்மானங்களை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே தேர்தலை திரும்பப் பெற தனித் தீர்மானம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் தாக்கல்!

Last Updated :Feb 14, 2024, 5:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.