ETV Bharat / state

இப்படி ஒரு திருப்பு, அப்படி ஒரு திருப்பு.. உலக தோசை தினம் இன்று - தோசையின் வரலாறு தெரியுமா?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 3, 2024, 7:00 AM IST

World Dosa day: தென்னிந்தியர்கள் இல்லத்தில் வாரத்திற்கு 7 நாட்களும் செய்யப்படும் உணவாக இருக்கும் தோசையின் தினம் இன்று. அப்படி அனைவரும் விரும்பி உண்ணும் இந்த தோசை எங்கிருந்து வந்தது என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் காணலாம்..

உலக தோசை தினம்
World Dosa day

சென்னை: தென் இந்தியர்கள் அதிகம் விரும்பும் காலை உணவு என்கிற இடத்தை தோசை பிடித்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. மனநிலைக்கு ஏற்றவாறு மசால் தோசை, ரவா தோசை நெய் தோசை, பொடி தோசை என வகைவகையான தோசைகளை மக்கள் ருசித்து வருகின்றனர்.

பொதுவாக தென்னிந்தியர்கள் தோசைக்கு சட்னி, சாம்பார், பொடி ஆகியவற்றை தொட்டு சாப்பிடுவது வழக்கம். தின்ன தின்ன ஆசை என்பதற்கு உதாரணமாக காலை மட்டுமல்லாமல், எந்த வேளையாக இருந்தாலும் ஆசையாக தோசை உண்ணும் மக்கள் இருக்கிறார்கள். அப்படி வாழ்வின் அங்கமாக இருக்கும் தோசைக்கு இன்று ஒரு சிறப்பான நாள். ஆம், இன்று (மார்ச்.03) உலக தோசை தினம்.

தோசையின் வரலாறு: தென்னிந்தியர்கள் விரும்பும் தோசை, தற்போது இந்தியா முதல் இங்கிலாந்து வரை பிரபலமாகி உள்ளது. 5ம் நூற்றாண்டில் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள கோயில் தெருக்களில் இந்த தோசைகள் உருவாகியதாக கூறப்படுகிறது. தென் இந்திய மாநிலங்களில் தோசைக்கு ஒவ்வொரு பெயர் இருந்தாலும், 10ம் நூற்றாண்டில் உள்ள தமிழ் இலக்கியத்தில் 'dosa' என்கிற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளது.

தோசைகளின் கதை: தோசை தங்களுக்கு சொந்தமான உணவு என தமிழ்நாடு மற்றும் கர்நாடகா உரிமை கொண்டாடி வரும் நிலையில், கர்நாடகா தான் தோசையின் பிறப்பிடம் என்கிறார் உணவு ஆராய்ச்சியாளர் பி. தங்கப்பன் நாயர்.

12ம் நூற்றாண்டில் கர்நாடாகவை ஆண்ட மூன்றாம் சோமேஸ்வர மன்னர் எழுதிய மனசோலாசா (Manasollasa) என்ற புத்தகத்தில் தோசைக்கான செய்முறையை எழுதி வைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர் கூறுகிறார். அந்த பிரிவிற்கு 'தோசகா' என்ற தலைப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. முதலாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தில் தோசை என்கிற சொல் பயன்படுத்தப்பட்டதாக தமிழகத்தை சேர்ந்த உணவு ஆராய்ச்சியாளர் கே டி அசாயா கூறுகிறார்.

தோசை உண்ண முக்கிய காரணம்: உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் குறித்து அதிகம் கவனம் செலுத்தி வரும் மக்கள் மத்தியில் தோசை ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது. அரிசி, கருப்பு உளுந்து மற்றும் சிறிதளவு வெந்தயம் சேர்த்து ஊர வைத்து அரைக்கும் முறையே ஆரோக்கியத்திற்கான காரணியாக கருதப்படுகிறது. 8 மணி நேரம் கழித்து புளித்து, பொங்கி வரும் மாவில் லாக்டிக் அமில பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் என அமினோ அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் தோசை ஊட்டச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகிறது.

தோசை வகைகள்: தோசை சுடும் போது நெய், பொடி, வெங்காயம், முட்டை, உருளைக்கிழங்கு மசாலா என அவரவர் விருப்பத்திற்கேற்ப பல வகைகளில் உண்ணும் வழக்கம் உள்ளது. அந்த வகையில் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் பலர் தோசைக்கு மாவு அரைக்கும் போது, அதில் கம்பு, கேழ்வரகு, சம்பா, கோதுமை போன்ற தானியங்களை பயன்படுத்துவர். வீட்டில் மட்டுமல்லாது தற்போது கடைகளிலும் விதவிதமான தோசைகள் விற்கப்படுகிறது.

கோயம்புத்தூரில் தோசை மன்னன்: கோயம்புத்தூரைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், கடந்த ஆண்டில் மட்டும் 447 தோசைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து, நாட்டின் தோசை சாம்பியனாக உருவெடுத்துள்ளார். அதை போல் ரம்ஜான், கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் போன்ற முக்கிய தினங்களில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக தோசை இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஒரே ஆண்டில் 29 கோடி தோசைகளா?: கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் இந்தாண்டு பிப்ரவரி மாதம் வரையில் இந்தியாவில், 29 கோடி தோசைகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக உணவு விநியோக தளமான ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பேய்களின் சமையலறையா கொடைக்கானல் குணா குகை? 'மஞ்சுமெல் பாய்ஸ்' கதை உண்மையா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.