ETV Bharat / state

அடையாறு ஆற்றை சீரமைக்க ரூ.4778.26 கோடி நிதி ஒதுக்கீடு - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 15, 2024, 9:51 AM IST

Adyar River: சென்னையில் உள்ள அடையாறு ஆற்றை சீரமைக்கும் திட்டத்திற்காக அரசு, தனியார் பங்களிப்பின் கீழ், ரூ.4,778.26 கோடி மதிப்பில் நிர்வாக நிதி அனுமதி வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

MK Stalin gave administrative sanction for Adyar River restoration project at an estimate of Rs.4778.26 crores
MK Stalin gave administrative sanction for Adyar River restoration project

சென்னை: சென்னையில் அரசு மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் அடையாறு சீரமைப்பு திட்டத்திற்காக (Hybrid Annuity Model) ரூ.4775 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'நகர்ப்புரங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் தூய்மையான, பசுமையான மற்றும் நிலையான ஆரோக்கியமான சுற்றுச்சூழலை வழங்குவது தமிழ்நாடு அரசின் நோக்கமாகும்.

இவ்விலக்கினை அடையும் பொருட்டு, ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் சுற்றுச்சூழலை சீரமைக்க தேவையான திட்டங்களை தயாரித்தல், ஒருங்கிணைத்தல், சீரமைப்புப் பணிகளை கண்காணித்தல் மற்றும் சென்னை பெருநகரத்திற்கு உட்பட்ட கூவம், அடையாறு, கொசஸ்தலையாறு, பக்கிங்காம் கால்வாயுடன் இன்னும் பிற கிளை கால்வாய்கள், முகத்துவாரங்கள் மற்றும் கழிமுகங்களை சீரமைத்தல் போன்ற பணிகளை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

மேற்கண்ட இலக்குகளை அடையவும், நகரின் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும் பல்வேறு சார்துறைகளுடன் ஒன்றிணைந்து சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அவை பின்வருமாறு;

நடைபெற்று வரும் சுற்றுச்சூழல் சீரமைப்பு திட்டங்கள்: பெருநகரில் உள்ள ஆறுகளின் சுற்றுச்சூழலை மேம்படுத்த தமிழ்நாடு அரசினால், ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டம் மற்றும் அடையாறு நதி சீரமைப்பு திட்டம் ஆகிய திட்டங்கள் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சீரமைப்பின் துணைத்திட்டங்கள் தொடர்புடைய சார்துறைகளால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதாவது தூர்வாருதல், சிறுகால்வாய் அமைத்தல் மற்றும் வெள்ள தடுப்புச்சுவர் அமைத்தல் போன்ற பணிகள் நீர்வளத்துறையால் மேற்கொள்ளப்படுகின்றது. திடக்கழிவு அகற்றுதல், பாதுகாப்பு வேலிகள் அமைத்தல், மிதவை தடுப்பான் அமைத்தல், பாலங்களை அழகுபடுத்துதல், பூர்வீக தாவரங்கள் நடவு செய்தல் மற்றும் நதிக்கரையோர மேம்பாட்டுப் பணிகள் பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக இயக்குநரகம் மற்றும் ஊரக வளர்ச்சி இயக்குநரகத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தால், கழிவுநீரை இடைமறித்தல் மற்றும் மாற்று வழிகளை அமைத்தல், நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்துதல் மற்றும் பாதாள சாக்கடை திட்டம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கான மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு திட்டங்கள் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்புத்திட்டம்: தமிழ்நாடு அரசு, ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்பு பணிகளை பருத்திப்பட்டு அணையிலிருந்து முகத்துவாரம் வரையிலான 32 கிலோ மீட்டர் தூரம் மேற்கொள்ள ரூ.735.08 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.

இச்சீரமைப்புத்திட்டத்தின் முக்கிய கூறுகள்: கழிவுநீர் கூவம் நதியில் கலப்பதைத் தடுக்க மாற்று ஏற்பாடுகளை செய்தல், திடக்கழிவுகளை அப்புறப்படுத்துதல், நதியின் வெள்ளநீர் கொள்ளளவை மேம்படுத்துதல், கூவம் நதிக்கரையில் வாழும் மக்களுக்கான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான திட்டம், பல்லுயிர்பெருக்கத்தை அதிகரித்தல் மற்றும் நதியின் கரையோர மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவை ஆகும். இந்த சீரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில், இதுவரை ரூ.545.22 கோடி நிதி சார்துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதன் கிளை கால்வாய்கள், கூவம் மற்றும் அடையாறுஆறுகளின் கிளை கால்வாய்கள் சீரமைப்பு திட்டங்கள்: சென்னை பெருநகரில் உள்ள நீர்வழித்தடங்களை முழுமையாக சீரமைப்பதற்காக, பக்கிங்காம் கால்வாய் மற்றும் அதன் பிரதான கிளை கால்வாய்கள், கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் கிளை கால்வாய்கள் சீரமைப்பு திட்டப்பணிகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.1,281.88 கோடி நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.

தொடர்புடைய சார் துறைகளால் ஆயத்தப் பணிகளான டிஜிபிஎஸ் கணக்கெடுப்பு மூலம் எல்லை கணக்கெடுப்பு மற்றும் எல்லை வரையறுத்தல் போன்ற முதற்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மறுக்குடியமர்வு மற்றும் மறுவாழ்வுக்கான குடும்பங்களைக் கூட்டு பையோமெட்ரிக் (Biometric) கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அடையாறு முகத்துவாரச் சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டம்: இத்திட்டத்தின் (300 ஏக்கர்) 2ம் கட்ட பணிகளை அடையாறு உப்பங்கழி, முகத்துவாரம், சிறு தீவுகள், மணல் திட்டுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மேற்கொள்ள ரூ.24.93 கோடிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. இதன் முக்கியக் கூறுகளாக, சீமைக்கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் முற்றிலும் அகற்றப்பட்டு, கரைகள் திடப்படுத்தப்பட்டு, நெகிழி மற்றும் கட்டடக்கழிவுகளை அகற்றி, உப்பங்கழியில் மிதந்த மட்காத நெகிழி பொருட்கள் மற்றும் திடக்கழிவுகளை அகற்றி மற்றும் ஆழப்படுத்தி, ஓதத்தின் தொடர்பு மற்றும் நீர்பரப்பு பகுதி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதில், பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் சதுப்பு நிலத்தாவரங்கள் மற்றும் உள்ளூர் தாவரங்கள் நடப்பட்டுள்ளன. அடையாறு உப்பங்கழி மற்றும் முகத்துவாரப் பகுதிகளில் (358 ஏக்கர்) சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, மெல்லுடலிகள், நண்டுகள், தும்பிகள், பட்டாம்பூச்சிகள், மீன்கள், இருவாழ்விகள், ஊர்வன, பறவைகள் மற்றும் பாலூட்டிகள் போன்ற 424 வகையான விலங்குகள் உள்ளன. சீரமைப்பிற்கு முன்பு இந்த எண்ணிக்கை 141 ஆக இருந்தது. சீரமைக்கப்பட்டஅடையாறு உப்பங்கழி மற்றும் முகத்துவாரம் நகர்ப்புர ஈரநில பல்லுயிர் பெருக்கத்தின் வாழ்விடமாகத் திகழ்கிறது.

அடையாறு நதி சீரமைப்பு திட்டம்: அடையாறு நதியின் சுற்றுச்சூழல் சீரமைப்புப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.555.46 கோடி நிர்வாக அனுமதி வழங்கி, முக்கிய பணிகளான கழிவுநீர் மேலாண்மை, திடக்கழிவு அகற்றுதல், நதியின் வெள்ளநீர் கொள்ளளவை மேம்படுத்துதல், மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வுக்கான பணிகள், பல்லுயிர் பெருக்கத்தை அதிகரித்தல் மற்றும் நதியின் கரையோர மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளுதல் ஆகியவை நடைபெற்று வருகின்றன.

இந்த சீரமைப்பு பணிகள் தொடர்புடைய சார்துறைகளால் பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சீரமைப்பு பணிகள் மார்ச் 2024-ல் முடிக்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்காக, சீரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில், இதுவரை சார்துறைகளுக்கு ரூ.372.29 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

சிறப்புநோக்கு நிறுவனம் மூலம் அடையாறு நதியை சீரமைக்கும் ஒருங்கிணைந்த திட்டம்: சென்னையில் உள்ள முக்கிய நீர் வழித்தடங்களை சீரமைத்திட தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், இதன் தொடர்ச்சியாக இதற்கு முன்னெழும் பல்வகை சவால்களையும், ஆற்றில் தொடர்ந்து கலக்கும் கழிவுநீரை தடுக்க ஒரு ஒருங்கிணைந்த திட்டமும், முயற்சியும் அவசியம். அதன் முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு 2023 -2024ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், "சிங்கார சென்னையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக அடையாறு, கூவம் உள்ளிட்ட நீர்வழிகளை சுத்தப்படுத்தி, மறுசீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த முயற்சிகளின் முதற்கட்டமாக, 44 கிலோ மீட்டர் நீளமுள்ள அடையாறு ஆற்றில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தில் கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுத்தல், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் போன்ற ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் எழில் கொஞ்சும் பூங்காக்கள், பசுமை நடைபாதைகள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள் தரமாக அருந்தகங்கள் போன்றா கண்கவர் பொழுதுபோக்கு அம்சங்கள் அடையாறு ஆற்றங்காரையை அலங்கரிக்கும். இத்திட்டம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் ஏறத்தாழ ரூ.1,500 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

தற்போது இந்த திட்டத்திற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆற்றுப்படுகையில் முதற்கட்டமாக, அடையாறு ஆற்றை மீட்டுருவாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஒருங்கிணந்த இத்திட்டத்தினை நிறைவேற்ற தேவையான ரூ.4,778.26 கோடி நிர்வாக மற்றும் நிதி ஒப்புதலை வழங்கி உத்தரவு வழங்கியுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மம்தா பானர்ஜிக்கு நெற்றியில் காயம் - மு.க.ஸ்டாலின் வருத்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.