ETV Bharat / state

அமெரிக்காவில் பெற்றோரை இழந்த குழந்தையை 2 வருடங்களுக்கு பிறகு மீட்ட சித்தி.. சென்னை அழைத்துவரப்பட்டது எப்படி? - TN Child rescued from US

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 2, 2024, 1:36 PM IST

Updated : Apr 2, 2024, 3:26 PM IST

அமெரிக்காவில் தாய், தந்தையை இழந்த இரண்டு வயது குழந்தையை அமெரிக்க அரசு வெறோரு தம்பதிக்கு தத்துக்கொடுத்த நிலையில் குழந்தையின் சித்தி இரண்டு வருடங்கள் சட்டப்போராட்டம் நடத்தி குழந்தையை சென்னை அழைத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

அபிநயா செய்தியாளர்கள் சந்திப்பு

சென்னை: அமெரிக்காவில் மிசிசிப்பி பகுதியில் வசித்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் கடந்த 2022 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தாய், தந்தை இழந்த குழந்தையை உறவினர்கள் மீட்பதற்குள், அமெரிக்க அரசு குழந்தையை பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தம்பதிக்கு அதிகாரபூர்வமாக தத்துகொடுத்துள்ளது. இதனால், தனது அக்காவின் குழந்தையை மீட்க குழந்தையின் சித்தி அமெரிக்க நீதிமன்ற உதவியை நாடியுள்ளார்.

ஆனால், குழந்தையை தத்தெடுத்த தம்பதியினரும் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் முறையீடு செய்வது குறித்து தெரியாததால், அவர்களுக்கு தமிழக அரசின் அயலக தமிழர் நலவாரியம், இந்திய தூதரகம், தமிழ்ச் சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தேவையான உதவிகளை செய்துள்ளது.

இந்த விவகாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று உதவி கேட்டுள்ளனர். இதையடுத்து, முதலமைச்சரின் உத்தரவின்படி, தமிழக அரசின் அயலக தமிழர் நலவாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி அமெரிக்கா சென்று அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள், தமிழ்ச் சங்கங்கள், சட்ட நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் ஆலோசனை நடத்தி அமெரிக்க நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களை சமர்பித்துள்ளார்.

உரிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பித்ததின் அடிப்படையில், குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இரண்டு ஆண்டு நீண்ட சட்டப் போராட்டத்துக்கு பிறகு, அமெரிக்க குடியுரிமை பெற்ற 2 வயது குழந்தை, சித்தியுடன் நேற்று தமிழகம் வந்தடைந்தான். சென்னை விமான நிலையத்திற்கு வந்த குழந்தையை அவனது உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

இது குறித்து குழந்தையை மீட்ட அபிநயா கூறுகையில், "எனது அக்கா மற்றும் மாமா அமெரிக்காவில் மிசிசிப்பி பகுதியில் வசித்து வந்தனர். அவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் தற்கொலை செய்து கொண்டனர். இதனால், அவர்களது 2 வயது குழந்தையை, அந்நாட்டு குழந்தை பாதுகாப்பு சேவைகள் (சிபிஎஸ்) தங்களுடைய பாதுகாப்பில் எடுத்துள்ளது.

நான் அமெரிக்கா சென்று குழந்தையை மீட்பதற்குள், அமெரிக்க அரசு குழந்தையை பஞ்சாப்யை சேர்ந்த தம்பதிக்கு அதிகாரபூர்வமாக தத்துகொடுத்துள்ளது. இதனையடுத்து குழந்தையை மீட்க நான் அமெரிக்கா சென்ற நிலையில், அங்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த மருத்துவர் சுவாமி மற்றும் கலா சுவாமி தம்பதியினர் தங்களது பெண்ணாக என்னை பார்த்துக்கொண்டனர்.

மேலும், அயலக தமிழர் நலவாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி அமெரிக்கா வந்து அங்குள்ள தமிழ் சங்கம், தன்னார்வளர்களிடம் பேசி தனக்கு முழு ஆதரவு அளித்து தேவையான உதவிகளை செய்தனர். எனது அக்காவின் குழந்தையை மீட்க பெரும் உதவியாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்களது குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தற்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்று தனது நன்றியை தெரிவித்தார்.

இதையும் படிங்க: தேர்தல் விதிமுறை எதிரொலி: ஈரோட்டில் ரூ.3.75 கோடி பறிமுதல் - ஈரோடு கலெக்டர் தகவல் - Lok Sabha Election 2024

Last Updated :Apr 2, 2024, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.