ETV Bharat / international

மாலத்தீவில் இருந்து முற்றிலும் வெளியேறிய இந்திய ராணுவம்... அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? - Indian Soldier return from Maldives

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 10, 2024, 11:37 AM IST

மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்ட ராணுவ படைகள் அனைத்தையும் இந்தியா திரும்பப் பெற்றுக் கொண்டதாக அந்நாட்டு அதிபர் முகமது முய்சுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

மாலே: சீன ஆதரவாளராக அறியப்படும் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்திய எதிர்ப்பு அரசியல் கொள்கையை கொண்டவராகவும், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தை வெளியேற்றுவதில் அதிதீவிரமும் காட்டி வந்தார். மாலத்தீவு அதிபராக பதவியேற்றது முதல் முகமது முய்சு, அந்நாட்டில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ துருப்புக்கள் வெளியேற்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார்.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 15ஆம் தேதிக்குள் மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்ற வேண்டும் என கெடு விதித்து உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில், தன் முடிவில் இருந்து பின்வாங்கிய முகமது முய்சு பகுதி வாரியாக மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ துருப்புகள் வெளியேற அனுமதி அளித்தார்.

அதன் படி மாலத்தீவின் மூன்று விமான தளங்களில் இந்திய ராணுவ துருப்புகள் நிலை நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் அதில் ஒரு விமான தளத்தில் உள்ள ராணுவ துருப்புகள் கடந்த மார்ச மாதம் வெளியேற்றப்பட்டன. மேலும், 2 விமான தளங்களில் உள்ள இந்திய துருப்புகள் மே மாதம் 10ஆம் தேதிக்குள் வெளியேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டு இருந்த இந்திய ராணுவ படைகள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டதாக அதிபர் முகமது முய்சுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டு இருந்த கடைசி கட்ட இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட்டதாக அதிபர் மாளிகையின் தலைமை செய்தி தொடர்பாளர் ஹீனா வலீத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், எத்தனை வீரர்கள் கடைசி கட்டமாக வெளியேறினார்கள் என்பது குறித்த தகவலை அவர் வெளியிடவில்லை. மாலத்தீவில் நிறுத்தப்பட்டு இருந்த வீரர்களின் எண்ணிக்கை பற்றிய விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார். முன்னதாக இந்தியா பரிசளித்த இரண்டு ஹெலிகாப்டர்கள் மற்றும் டோர்னியர் விமானங்களை இயக்கவும், பராமரிக்கவும் இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கடந்த திங்கட்கிழமை மாலத்தீவில் இருந்து 51 இந்திய ராணுவ வீரர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக மாலத்தீவு அரசு அறிவித்தது. அதற்கு முன் மாலத்தீவில் ஏறத்தாழ 89 இந்திய வீரர்கள் இருப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மே 10ஆம் தேதிக்குள் இந்திய வீரர்களை திரும்பப் பெறுவது குறித்து இரு நாடுகளும் முடிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "பாகிஸ்தான் மரியாதைக்குரிய நாடு... அவர்களிடம் அணுகுண்டு உள்ளது" -மணிசங்கர் ஐயரின் கருத்தால் சர்ச்சை! - Mani Shankar Aiyar

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.