ETV Bharat / international

காஸாவில் இந்தியர் கொலை! ஐநா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவருக்கு நேர்ந்த கொடூரம்! - Israel Gaza Conflict

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 14, 2024, 12:41 PM IST

இஸ்ரேல் தாக்குதலால் உருக்குலைந்து போன காஸாவில் ஐநா பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த இந்தியர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Representative image (ANI)

ஜெனீவா: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் காஸா மீது இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல் காரணமாக காஸாவில் கடுமையான மனிதாபிமான உதவிகளுக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காஸாவுக்கு உறுதுணையாக ஐநா, மற்றும் பல்வேறு நாடுகள் மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகின்றன.

இந்நிலையில், ஐநாவின் பாதுகாப்புத் துறை அமைப்பு சார்பில் காஸாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ராபா பகுதியில் ஐநா பாதுகாப்பு குழுவினர் மீட்பு, மனிதாபிமான உதவிகளை வழங்கிக் கொண்டு இருந்த நிலையில், அப்போது அங்கு பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஐநா பாதுகாப்பு குழுவில் பணியாற்றி வந்த இந்தியர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாக்குதலில் உயிரிழந்த நபர் குறித்த அடையாளங்கள் தெரியவராத நிலையில், அவர் ராணுவத்தில் பணியாற்றியவர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சர்வதேச அளவில் ஐக்கிய நாடுகள் சபையை பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நபர் கொல்லப்பட்டது இதுவே முதல் முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராபாவில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்கு வாகனத்தில் சென்று கொண்டு இருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது. மேலும், இந்த தாக்குதலில் ஐநா பாதுகாப்பு குழுவை சேர்ந்த மற்றொரு நபர் பலத்த காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ராபா நகரில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனையில் அந்த நபர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக ஐநா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், ராபாவில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்கு சென்ற போது, ஐநா வாகனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புத் துறை ஊழியர் ஒருவர் இறந்ததையும் மற்றொரு ஊழியர் காயமடைந்ததையும் அறிந்து மிகவும் வருத்தமடைந்ததாக தெரிவித்துள்ளார்.

காஸா மீதான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை தொடங்கி 7 மாதங்களை கடந்த நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை இழந்து அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: வாரணாசியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்! கால பைரவர் கோயிலில் சாமி தரிசனம்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.