ETV Bharat / entertainment

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் 2024 - 2026; வெற்றி பெற்ற வேட்பாளர்கள் யார்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 17, 2024, 3:00 PM IST

TN Film Directors Association: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2024-2026ஆம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று சென்னையில் உள்ள இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நடைபெற்றது.

TN Film Directors Association
TN Film Directors Association

சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 2024 - 2026ஆம் ஆண்டுகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. ஒரு தலைவர், 2 துணைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் என மொத்தம் 27 பதவிகள் கொண்ட இந்த தேர்தலுக்கான வேட்பு மனு கடந்த மார்ச் 1ஆம் தேதி நடைபெற்றது.

இதில் தலைவர் பதவிக்கு எஜமான், சின்ன கவுண்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.வி உதயகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதேபோல், செயலாளர் பதவிக்கு இயக்கநர் பேரரசு மற்றும் பொருளாளர் பதவிக்கு சரண் ஆகியேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். ஆனால், இவர்களை தவிர இந்த பதவிகளுக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் இவர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், இப்போது உள்ள நிர்வாகிகள் மீது எந்த குற்றச்சாட்டும் வைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தலைவர் பதவிக்கு இந்த முறை போட்டியிடப்போவது இல்லை என்று ஆர்.கே. செல்வமணி அறிவித்தார்.

இதன் பின்னர்தான் செயலாளராக இருந்த ஆர்வி உதயகுமார் தலைவராகவும், பேரரசு செயலாளராகவும், இயக்குநர் சரண் பொருளாளராகவும் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், இணைச் செயலாளர்களாக சுந்தர்.C, வெங்கடேஷ், எழில் ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

மீதி இருக்கும் பதவிக்கு நேற்று (மார்ச் 16) தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 2,600 பேர் உறுப்பினர்களாக உள்ள இந்த சங்கத்தில், இரண்டாயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டது. இதில் உதவி இயக்குநர்களும் வாக்களிக்க உரிமை பெற்றுள்ளனர்.

ஆனால், படம் இயக்கி இருந்தால் மட்டுமே இந்த இயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிக்கு போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நடைபெற்ற வாக்குபதிவு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி 'நமது புதுவசந்தம்' அணியின் உதவி இயக்குநர் பிரிவு இணைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஏகாம்பவாணன், ஆரல் டி மனோகர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அதேபோல் உதவி இயக்குநர் பிரிவு செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட அசோக் அண்ணாமலை, இந்திரா என்ற கிளாரா, முத்துவடுகு, ஏ.கே.நம்பிராஜன், ரமேஷ் பிரபாகரன், சாய்ராம்கி, சுப்பிரமணிய பாரதி ஆகியோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் இயக்குநர் பிரிவு செயற்குழு உறுப்பினர்கள் ராஜகுமாரன், மாதேஷ், மனோஜ் குமார், மித்ரன் ஆர் ஜவகர், எஸ்.ஆர்.பிரபாகரன், ராஜ்கபூர், ஆர்.கண்ணன், ரமேஷ் கண்ணா, சி.ரங்கநாதன், சரவண சுப்பையா ஆகியோர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி செந்தில்நாதன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, வெற்றி பெற்ற அனைவருக்கும் இன்று (மார்ச் 17) தேர்தல் அதிகாரி செந்தில்நாதன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதையும் படிங்க: 'தேர்தலின்போது பணம் கையாடல் செய்தால் நடவடிக்கை பாயும்' - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.