ETV Bharat / entertainment

'நயன்தாரா ஆடினால் பார்க்கும் நீங்கள்..இவர்களையும் பாருங்கள்' - நடிகர் ராகவா லாரன்ஸ் - actor raghava lawrence

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 11:45 AM IST

Updated : Apr 16, 2024, 1:36 PM IST

Actor Raghava Lawrence: மாற்றுத்திறனாளிகளை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளதாகவும், அதில் வரும் வருமானத்தில் இவர்களுக்கு வீடுகட்டி தரவுள்ளேன் என மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மல்லர் கம்பம் சாகச நிகழ்ச்சியில் நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார். மேலும், நடிகை நயன்தாரா எத்தனை முறை ஆடினாலும் பார்ப்பதுபோல், இவர்களையும் பார்க்கட்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ACTOR RAGHAVA LAWRENCE
நடிகர் ராகவா லாரன்ஸ்

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் ராகவா லாரன்ஸ், திரையுலகை தாண்டி நிஜவாழ்வில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக பல ஆதரவற்ற குழந்தைகள், ஏழை குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் என ஏராளமானோரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்நிலையில்,தமிழர்களின் பாரம்பரிய மல்லர் கம்பம் சாகச கலை நிகழ்வு, இதுவரையிலும் உடல் வலுக்கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்ற நிகழ்வாக இருந்தது. தற்போது ராகவா லாரன்ஸ் “கை கொடுக்கும் கை” மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில், மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்ற மல்லர் கம்பம் சாகச நிகழ்வு, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். பின்னர் அவர் பேசுகையில், “எனக்கு எப்போதும் ஊக்கம் தருவது, இந்த மாற்றுத்திறனாளி குழுவினர்தான். எனக்கு எப்போது தளர்வாக இருந்தாலும், இவர்களை ஆட வைத்துப் பார்த்து ஊக்கம் கொள்வேன். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும், பாடல்களில் டான்ஸில் இவர்களை ஆட வைப்பேன்.

சினிமாவில் சிலநேரம் ஒரே மாதிரி இருக்கிறதே இவர்களையே தொடர்ந்து பயன்படுத்த வேண்டாம் மாஸ்டர் என்பார்கள், 'நயன்தாரா எத்தனை முறை ஆடினாலும் பார்க்கிறார்களே.. அதுபோல், நம் படங்களை பார்க்கட்டும் இவர்களையும் பார்க்கட்டும்' என்பேன். சில காலமாக அவர்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கிறதே எனக் கவலைப்பட்டேன்.

அப்போதுதான் ‘மல்லர் கம்பம்’ என ஒன்று இருக்கிறது அதைக் கற்றுக்கொள்கிறோம், மாஸ்டர் என்றார்கள். இது நல்ல வலுவான உடல் உள்ளவர்கள் செய்வது உங்களால் முடியுமா? எனக் கேட்டேன்; ஆனால், எங்களால் முடியும் என்றார்கள். அதேபோல் கற்றுக்கொண்டார்கள், இங்கு அவர்கள் செய்வதை பார்த்தால் பிரம்மிப்பாக உள்ளது. இவர்களால் முடியாதது எதுவுமே இல்லை; இவர்களால் எல்லாமே முடியும். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் முக்கிய காரணமே, இதன் மூலம் இவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

இவர்கள் வாடகை கட்டக்கூட கஷ்டப்படுகிறார்கள். அதனால் உங்கள் வீட்டு விழா, தெரிந்த நிகழ்ச்சிகளில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்குங்கள். இவர்களை அழைத்து நிகழ்ச்சி செய்யும் அனைவருக்கும் நான் வீடியோவில் வாழ்த்து சொல்வேன். இவர்களுக்காக, நான் என்னால் முடிந்த அனைத்தும் செய்வேன். இந்தக் கலை இவர்களை வாழவைக்கும். இக்கலையை கற்றுக்கொண்டதற்காக இவர்கள் அனைவருக்கும் நாளை என் வீட்டில் ஸ்கூட்டி வழங்குகிறேன்.

அது மட்டுமில்லாமல் மாற்றுத்திறனாளிகளை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளேன். அதன்மூலம் வரும் வருமானத்தில், இவர்களுக்கு வீடுகட்டி தரவுள்ளேன். நீங்களும் இவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளியுங்கள்” என்று கெட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: திரை பிரபலங்கள் மத்தியில் கோலாகலமாக நடைபெற்ற ஷங்கர் மகளின் திருமண விழா! - Director Shankar Daughter Marriage

Last Updated :Apr 16, 2024, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.