ETV Bharat / entertainment

"கட்டிட வேலை செய்பவர்களுக்கா வீடு சொந்தம்?" - இளையராஜாவை சாடிய தயாரிப்பாளர் கே.ராஜன்! - K RAJAN ABOUT ILAYARAJA

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2024, 7:48 PM IST

Producer Rajan about Ilayaraja: இளையராஜா பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறார் எனவும், தயாரிப்பாளர்களுக்குத் தான் பாட்டும் இசையும் சொந்தம் எனவும் தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர் ராஜன் மற்றும் இளையராஜா புகைப்படம்
தயாரிப்பாளர் ராஜன் மற்றும் இளையராஜா புகைப்படம் (credit - ETV Bharat TamilNadu)

சென்னை: ஸ்ரீ சாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில், பி. பாண்டுரங்கன் தயாரிப்பில் கஜேந்திரா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் 'குற்றம் தவிர்'. அட்டு பட புகழ் ரிஷி ரித்விக் இப்படத்தில் நாயகனாக நடிக்கிறார். ஆராத்யா, சித்தப்பு சரவணன், சென்ராயன், வினோதினி மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்திற்கு பி.கே.எச்.தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

இந்த நிலையில், குற்றம் தவிர் படத்தின் தொடக்க விழா சென்னை பிரசாத் லேபில் பூஜையுடன் தொடங்கியது. தயாரிப்பாளரும், விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே. ராஜன் விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்திப் பேசும்போது, “பல நல்லவர்களை எல்லாம் அழைத்து இந்த விழா நடைபெறுகிறது. ஸ்ரீ சாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில் நல்ல கதை அம்சம் உள்ள படமாக இந்த குற்றம் தவிர் படம் உருவாக இருக்கிறது.

நாட்டில் உள்ளவர்கள் குற்றங்களைத் தவிர்த்து, நல்லதை நினைத்து நல்லதைப் பேசி நல்லதைச் செய்ய வேண்டும் என்கிற கருத்தின் அடிப்படையில், குற்றம் தவிர் என்கிற அற்புதமான கதையை இயக்குநர் அமைத்திருக்கிறார். இப்படத்தின் ஆரம்ப விழாவை ஆடம்பரம் இல்லாமல் எளிமையாகவும், அழகாகவும் நடத்தியிருக்கிறார் தயாரிப்பாளர்.

இந்தப் படம் விரைவில் எடுக்கப்பட்டு, நல்ல முறையில் வெளியாகி தமிழகம் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மக்களிடம் நல்லாதரவைப் பெற வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார். அதனைத் தொடர்ந்து, கே. ராஜன் அண்மையில் நிலவும் பாடல்கள் உரிமை விவகாரம் குறித்து பேசுகையில், “ஒரு படத்தின் பாடல்களின் உரிமை தயாரிப்பாளருக்கேச் சொந்தம்.

ஒரு படத்தின் பாடல் மொத்தமாக இசை என்பதே தயாரிப்பாளருக்குத்தான் சொந்தம். ஏனென்றால், கதையை நாங்கள் தேர்ந்தெடுத்து, இயக்குநருடன் பேசி, கதாநாயகனுடன் பேசி, பிறகு இசையமைப்பாளருடன் பேசுகிறோம். இயக்குநர் கதைக்கேற்ற சூழலைச் சொல்லி, அதற்கு ஏற்ற மெட்டை இசையமைப்பாளரிடம் இயக்குநர் தான் வாங்குகிறார்.

இயக்குநர் சொல்லும் வேலையைத்தான் இசையமைப்பாளர் செய்ய வேண்டும். இசையமைப்பாளர் தன்னிச்சையாக தன் இஷ்டத்திற்கு எதுவும் செய்ய முடியாது. 10 ட்யூன் வாங்குவோம். சில நேரம் 25 ட்யூன் கூட வாங்கித் தேர்ந்தெடுப்போம். கொத்தனார் வீடு கட்டுகிறார். அந்த கொத்தனார் தினசரி கட்டிடம் கட்டுகிறார். அவருக்கு கூலி கொடுத்து விடுகிறோம்.

கட்டட வேலைகள் எல்லாம் முடிந்து கிரகப்பிரவேசம் செய்யும் போது அந்தக் கட்டடம் எனக்குத் தான் சொந்தம், நான்தான் கட்டினேன் என்று சொன்னால் எப்படி முட்டாள்தனமாக இருக்குமோ, அதேபோல, பாடல் இசை இசையமைப்பாளருக்குத் தான் சொந்தம் என்று சொல்வது மிகப்பெரிய தவறு.

நாங்கள் அதற்குரிய சம்பளத்தைக் கொடுத்து விட்டோம். அவர் எங்களுக்கு வேலை செய்தார். அது யாராக இருந்தாலும் சரி. இன்று அது வழக்கில் இருக்கிறது. எங்களுக்கு சாதகமாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்குத் தான் பாட்டும் இசையும் சொந்தம்.

அவர் ஒரு பெரிய இசைஞானி, அதில் எந்த சந்தேகமும் இல்லை. பெரிய பேராசையின் காரணமாக பணத்தின் மீது அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிறார். அவர் செய்வது அத்தனையும் சரியில்லாதது. பாடலைப் பாடுபவர்கள், வாத்தியங்கள் வாசிப்பவர்கள், வரிகள் எழுதுபவர்கள் அவர்களுக்குச் சொந்தம் இல்லையா? இவை அத்தனையும் தவறானது. ஒரு தயாரிப்பாளருக்குத் தான் பாடல்கள் அத்தனையும் சொந்தம்” என்றார்.

இதையும் படிங்க: மொழி பெரிதா? இசை பெரிதா? - பாடலாசிரியர் சினேகன் சொல்வதென்ன? - Snehan About Ilayaraja Issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.