ETV Bharat / entertainment

பொன்னியின் செல்வன் படத்தில் பணியாற்றியதால்தான்.. போர் பட இயக்குநர் பிஜோய் நம்பியார் கூறியது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 15, 2024, 8:36 AM IST

Updated : Feb 15, 2024, 4:33 PM IST

Por Movie: சிறிய பட்ஜெட் படங்களைத் தயாரித்தால்தான் புதிய நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் கிடைப்பார்கள் என்று போர் திரைப்பட இயக்குநர் பிஜோய் நம்பியார் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பிஜோய் நம்பியார்
போர் திரைப்படம்

பிஜோய் நம்பியார்

கோயம்புத்தூர்: இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில், நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ள ‘போர்’ திரைப்படம், மார்ச் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், கோவை அவினாசி சாலையில் உள்ள பிராட்வே மாலிற்கு (Broadway), போர் திரைப்பட குழுவினர்களான இயக்குநர் பிஜோய் நம்பியார், நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், நடிகை சஞ்சனா நடராஜன் ஆகியோர் வந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அர்ஜுன் தாஸ், “போர் திரைப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ளது. தமிழில் நாங்கள் நடித்துள்ளோம். கல்லூரி, கல்லூரி மாணவர்களின் சேட்டைகள் குறித்து கதைக்களம் அமைந்துள்ளது. படத்தை அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கிற்குச் சென்று பாருங்கள்” என்றார்.

வில்லன் கதாபாத்திரம் அல்லது கதாநாயகன் கதாபாத்திரம் கடினமாக உள்ளதா என்ற கேள்விக்கு, “இரண்டும் கடினமானது. நல்ல கதாபாத்திரம் எது கிடைத்தாலும் செய்வேன். இந்த படத்தில் நான் வில்லனா, இல்லையா என்பது எனக்கே தெரியவில்லை. மக்கள் என்னை அன்பாகவும் ரசித்தார்கள், வில்லன் கதாபாத்திரத்திலும் ரசித்தார்கள். பொதுமக்கள் எதனை ஏற்றுக் கொள்கிறார்களோ, அதனைத் தொடர்ந்து செய்வேன்” என பதில் அளித்தார்.

மேலும், லோகேஷ் கனகராஜ் வில்லன் கதாபாத்திரத்திற்கு அழைத்தால், அதுதான் லைன் அப் நெகட்டிவ் ரோலாக இருக்கும் என்று தெரிவித்தார். நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். நன்கு யோசித்து அவர் இந்த முடிவை எடுத்திருப்பார் என்றார். அரசியல் கட்சி துவங்கிய பின்பு படங்களில் நடிக்க மாட்டேன் என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு, அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பார் என்று நம்பிக்கை உள்ளது. அவர்களது ரசிகர்கள் அதைதான் விரும்புவார்கள் என்றார்.

பின்னர் பேசிய நடிகர் காளிதாஸ் ஜெயராம், “இந்த படத்தின் மூலமாக பல்வேறு விஷயங்களை தங்களுக்குள்ளாகவே பகிர்ந்துள்ளோம். விக்ரம் படத்தில் தன்னுடைய கதையும், அர்ஜுன் தாஸ் கதையும் வெவ்வேறு நாட்களில் எடுக்கப்பட்டது. ஆனால், இந்த படத்தில் ஒற்றுமையாக இருந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

பாவக்கதைகள் திரைப்படம் முடித்தவுடன், சமூக அக்கறை உடைய படங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால், நடிகர் மக்களுக்காக அனைத்து கதாபாத்திரங்களையும் நடிக்க வேண்டும். இந்த படத்தில் மலையாள மொழி பேசினாலும், அதற்கும் இந்த படத்திற்கும் சம்பந்தமில்லை” என்றார்.

அதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் பிஜோய் நம்பியார், “இந்த படம் கல்லூரி வாழ்க்கை சார்ந்த கதை. சமூகம் சார்ந்த கருத்துக்களும் இதில் அடங்கியுள்ளது. இந்த படத்தில் தொழில்நுட்பக் கலைஞர்கள் மிக சிறப்பாக பணியாற்றி உள்ளனர்” என்றார். படத்தின் பெயர் போர் என்பதை எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தான் இயக்குநர் மணிரத்னத்துடன் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பணியாற்றும் பொழுது, ஒரு காட்சிகளில் அதிகப்படியாக போர், போர்க்களம் என்ற வார்த்தையைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்ததால் "போர்" என்ற பெயர் இந்த படத்திற்கு பொருந்தும் என எண்ணி வைத்தேன் என்று பதில் அளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “பெரிய பட்ஜெட் படங்களால் மட்டும் திரைத்துறை தொடர்ந்து செயல்படாது. அனைத்து விதமான படங்களும் வர வேண்டும். அனைத்து விதமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் வந்தால் திரைத்துறை வளர முடியும். சிறிய பட்ஜெட் படங்களுக்கான ஆதரவை மக்கள் அளித்தால், மிகவும் நன்றாக இருக்கும். பெரிய பட்ஜெட் படங்களை மட்டும் தயாரிக்க முடியாது. ஓரிரு சிறிய படங்களையும் தயாரித்தால்தான் புதிய இயக்குநர்கள், புதிய நடிகர்கள் கிடைப்பர். புதிய திறமைகளையும் நம்மால் கண்டறிய இயலும்” என்று தெரிவித்தார்.

பின்னர், நடிகை சஞ்சனா நடராஜன் பேசியாதாவது, “சோலோ, டேவிட் படங்களை பார்க்கும்போது மிகவும் அற்புதமாக இருக்கும். அதுபோன்ற படங்களில் நடிக்க மாட்டோமா என்று எண்ணியிருந்தேன். இந்த திரைப்படத்தில், எனக்கு இந்த கதாபாத்திரம் வேண்டும் என்று சண்டை போட்டு வாங்கினேன். சார்பட்டா இரண்டாவது பாகம் வருகிறது என்பதை சமூக வலைத்தளங்களைப் பார்த்து தெரிந்து கொண்டேன்” என்றார்.

இதையும் படிங்க: வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட ஜாக்டோ ஜியோ..!

Last Updated :Feb 15, 2024, 4:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.