ETV Bharat / entertainment

பிரபல நகைச்சுவை நடிகர் சேஷூ காலமானார்! - Lollu Sabha Seshu

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 26, 2024, 4:19 PM IST

Updated : Mar 26, 2024, 7:29 PM IST

Lollu Sabha Seshu dies: பிரபல நகைச்சுவை நடிகர் சேஷூ இன்று உடல்நலக் குறைவால் காலமானார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல நகைச்சுவை நிகழ்ச்சியான ‘லொள்ளு சபா’ தற்போது தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டு இருக்கும் ஏராளமான நடிகர்களை உருவாக்கிய ஒரு தொடராகும். சந்தானம், ஜீவா, யோகி பாபு, சுவாமிநாதன் என ஏராளமான நட்சத்திரங்கள் இதில் இருந்து உருவாகியவர்கள்தான்.

அப்படி இந்த நிகழ்ச்சியில், தனது தனித்துவமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் சேஷு என்கிற லட்சுமிநாராயணன் சேஷு. தனது நகைச்சுவை திறமையால் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டவர், உடல்நலக் குறைவு காரணமாக இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 60.

மாரடைப்பு காரணமாக சில நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவருக்கு, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சந்தானத்துடன் இவர் இணைந்து நடித்த ஏ1, டிடி ரிட்டர்ன்ஸ் , வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களில் இவரது நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. மேலும், கரோனா காலகட்டத்தில் சமூக வலைத்தள நண்பர்கள் வட்டாரத்திலிருந்து வந்த பணத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வாங்கி கொடுத்து உதவிகள் செய்து வந்துள்ளார்.

கரோனா காலகட்டத்தில் தனி மனித இடைவெளி தொடர்பாக நோய் பரவாமல் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த, தனது இருசக்கர வாகனத்தில் மைக் பொருத்திக் கொண்டு, வீட்டைச் சுற்றியுள்ள இடங்களுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். நேற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சேஷு இன்று உடல் நலக் குறைவால் உயிர் இழந்துள்ளார். நாளை காலை அவரின் இறுதி ஊர்வலம் பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: “சேஷு தமிழ் சினிமாவில் பிரபலமாகி ஒரு ரவுண்ட் வருவார் என நினைத்தேன்”,, லொள்ளு சபா இயக்குநர் இரங்கல்! - Seshu Passed Away

Last Updated :Mar 26, 2024, 7:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.