ETV Bharat / entertainment

காவல்துறை விசாரணைக்கு தயார்.. ஜாபர் சாதிக் விவகாரத்தில் இயக்குநர் அமீர் மீண்டும் விளக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 1, 2024, 3:02 PM IST

Director Ameer: ஜாபர் சாதிக் விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி பேச வேண்டாம் எனக் கூறியுள்ள இயக்குநர் அமீர், காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

director ameer
இயக்குநர் அமீர்

இயக்குநர் அமீர்

சென்னை: சமீபத்தில் டெல்லியில், 50 கிலோ 'சூடோபெட்ரின்' என்ற போதைப் பொருளை கடத்திய தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், டெல்லி காவல்துறையுடன் இணைந்து கைது செய்தனர். இந்த கடத்தலில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.

அதன் தொடர்ச்சியாக, பிடிபட்டவர்களிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், அதிர்ச்சியூட்டும் தகவலாக ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை இவர்கள் தேங்காய் பவுடர்கள் ஏற்றுமதி எனக் கூறி கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும், இந்த போதைப்பொருள் கடத்தலின் மூளையாக செயல்பட்டது, தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தான் என்ற தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர் இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் இறைவன் மிகப் பெரியவன், கயல் ஆனந்தி நடித்துள்ள மங்கை, வசந்த் ரவி நடித்துள்ள இந்திரா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இந்த நிலையில், தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் சம்பந்தப்பட்ட இந்த விவகாரத்தில், தனது பெயரும் அடிபடுவது பற்றி, இயக்குநர் அமீர் சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்‌.

அதில் "நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால், நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன். அந்த வகையில், சட்டவிரோத செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை" என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அவர் மேலும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார். அதில், "தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் விவகாரம் தொடர்பாக தொடர்ந்து என்னை தொடர்புபடுத்தி பேசி வருவதைப் பார்க்கிறேன். இது தொடர்பாக தெளிவான அறிக்கை வெளியிட்டதற்கு பிறகும், என்னை தொடர்புபடுத்தி பேசி வருகின்றனர். இது எனக்கும், என் குடும்பத்தினருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்துமே தவிர, வேறு எந்த பயனையும் கொடுக்காது. காவல்துறை இது தொடர்பாக விசாரணைக்கு அழைக்கும் பட்சத்தில், அதற்கு நான் தயார்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல் வைத்த மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.