ETV Bharat / entertainment

"நான் தான் ஹீரோ என்றதும், ஹீரோயின்கள் வேண்டாம் என்றனர்" - புகழ்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2024, 11:51 AM IST

Updated : Feb 9, 2024, 3:45 PM IST

Mr.Zoo Keeper: மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தின் செய்தியாளர் சந்திப்பில், பிரசாத் ஸ்டுடியோ அருகில் கார் கழுவிக் கொண்டு இருந்தேன், இன்றைக்கு பேனர் வைத்து நீங்கள் பண்ண படம் என்று சொல்லும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது என்று நடிகர் புகழ் கூறியுள்ளார்.

மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் புகழ்
மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் புகழ்

சென்னை: ஜே 4 ஸ்டுடியோஸ் - ராஜ ரத்தினம் தயாரிப்பில், இயக்குநர் சுரேஷ் இயக்கத்தில் சின்னத்திரை நடிகர் புகழ் நடிப்பில் உருவாகியுள்ள படம் மிஸ்டர் ஜூ கீப்பர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படத்தில் அனிமேஷன் இல்லாமல், உண்மையான புலியை நடிக்க வைத்திருப்பதாக படக்குழு அறிவித்தனர்.

நடிகர் சூரி பேச்சு: இந்த நிலையில், சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நேற்று (பிப்.7) நடைபெற்ற மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர்கள் சூரி, புகழ், முத்துக்காளை, நடிகை ஷெரீன், இயக்குநர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் சூரி, “காட்டுக்குள் படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும். நானும் 3 வருடம் அதை அனுபவித்து இருக்கிறேன். காடும், காட்டு உயிரினமும்தான் இயற்கைக்கு பக்கத்தில் இருக்கிறது.

ஊருக்குள் யானை, கரடி, சிங்கம், புலி எல்லாம் புகுந்ததாக சொல்கிறோம். ஆனால், அவைகள் அங்குதான் இருக்கிறது. நாம் தான் உள்ளே புகுந்துட்டோம் என்று நினைக்கிறேன். இது எல்லோருக்கும் சேர வேண்டிய கருத்து. எல்லோரும் பார்க்க வேண்டிய படம். மக்கள் மத்தியில் எப்போதும் யுவன் சங்கர் ராஜா இருந்து கொண்டு இருக்கிறார். புகழ் சினிமாவில் இன்னும் உச்சத்தில் வருவார். சினிமாவில் ஜெயித்த நிறைய பேர் கஷ்டப்பட்டுதான் வந்திருக்கிறார்கள்.

நானும் அதே மாதிரிதான் வந்துருக்கேன். தமிழ்நாட்டில் இருக்கும் எல்லார் குடும்பத்திலும் அவர் பேர் இருக்கிறது.‌ புலியை எப்படி சமாளித்த என்று கேட்டதற்கு, சிங்கம் புலியை சமாளிச்சுட்டேன், இந்த புலியை சமாளிக்க மாட்டேனா? என்று கூறினார். ஜெயிப்பது முக்கியம். அதில் நிலைப்பதும் முக்கியம்.‌ படம் யார் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால், அதை தியேட்டருக்கு கொண்டு வருவது கஷ்டமாக இருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.

நடிகர் புகழ் பேச்சு: இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய நடிகர் புகழ், “ஒரிஜினல் புலி கூடதான் பண்ணிருக்கேன் என்று சொல்லும் அளவுக்கு இருந்தது. அவ்வளவு முறை பல இடங்களிலும் சொல்லியிருக்கேன். இதே பிரசாத் ஸ்டூடியோ அருகில் கார் கழுவிக் கொண்டு இருந்தேன். இன்றைக்கு பேனர் வைத்து, நீங்கள் பண்ண படம் என்று சொல்லும்போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. யாராவது 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் திரும்பி எப்போ கொடுப்ப என்று கேட்பார்கள்.

ஆனால், என்னை நம்பி இவ்வளவு பணம் கொடுத்து படத்தை எடுத்ததற்கு தயாரிப்பாளருக்கு நன்றி. இதுவரை நிறைய ஹீரோயின்கள்கிட்ட இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்திருப்பேன். எல்லாரும் கதையைக் கேட்டு, யார் ஹீரோ என கேட்பார்கள் நான்தான் என்றதும் வேண்டாம் என்று கூறி விடுவார்கள். ஆனால், இந்த ஹீரோயின் மட்டும்தான் கதை பிடித்திருக்கு என என்னுடன் நடிக்க ஒத்துக் கொண்டார்.

ஒரிஜினல் புலி கூட படம் பண்ணுவது உண்மையில் எங்களுக்குதான் பயமாக இருந்தது. ஹீரோயினும், நானும் 1 மணி நேரம் ஷூட்டில் பேசுவோம். அவங்க பேசுவது எனக்கு புரியாது. நான் பேசுவது அவங்களுக்கு புரியாது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு மியூசிக் போடுவாரான்னு நினைத்தேன்.‌ ஆனால், போஸ்டரை பார்க்கும்போது சந்தோஷமாக இருந்தது. அவருக்கு எனது நன்றி. இந்த படத்தில் கொச்சைப்படுத்தும் வசனமோ, காட்சிகளோ எதுவும் கிடையாது.‌

நாம் அன்பு காட்டினால் மிருகங்கள் கூட அன்பாக இருக்கும் என்பதையும் காட்டி உள்ளோம். சூரி அண்ணன் ஊர் திருவிழாவிற்கு சென்றபோது, எல்லாரும் ஒன்றாக நில்லுங்கள் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று சொல்லும்போது, என்னையும் அழைத்து புகைப்படம் எடுக்க நிற்க வைத்தார். அவரது குடும்பத்தில் என்னையும் ஒருவராக பார்ப்பதில் மகிழ்ச்சி” என்று கூறினார்.

இதையும் படிங்க: "பத்து பாடல் எழுதிவிட்டு செத்துப் போகலாம் என்று சினிமாவிற்கு வந்தேன்" - சினேகன் பேச்சு!

Last Updated : Feb 9, 2024, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.